எங்கூட்டு மச்சானும் கச்சேரிக்கிப் போகப்போறான்…..

Mars Orbiter Missionக்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை இன்றைய 66வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அறிவித்திருக்கிறார். ஏனைய நாடுகளின் சாகசத்தைப் பார்த்து ஏங்கிப் போயிருந்த நமக்கு சந்திரயான் செயல்திட்டம் நமக்கு ஆர்வத்தை அளித்தது. இந்த செயல்திட்டம் உலக வல்லரசாக நம்மை நாம் அறிவித்துக்கொள்ள மத்திய அரசாங்கத்திற்கு உதவினாலும் இயற்பியல் மாணவர்களுக்கு அது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை.

Inline image 3

60களில் தொடங்கி நம் நாட்டிற்குப் பெறுமை தரும் விதமாக வளர்ந்து வந்த ISRO உலக நாடுகளின் தடைகள் காரணமாகவும், மோகம் தரும் கணினி அறிவியல் பெரும்பாலான பொறியாளர்களை வசீகரித்துவிட்ட காரணத்தினாலும் தற்காலத்தில் தொய்வடைந்து வருகிறது. வானவியல் ஆராய்ச்சி பந்தயத்தில் மிகவும் பின்தங்கிவிட்டோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பந்தயத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதில்லை ஆனால் நமக்கான இடத்தை இழக்காதிருப்பது நல்ல வானவியல் அறிஞர்களைத் தக்கவைக்க உதவும். ஆராய்ச்சிப் படிப்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

கிட்டத்தட்ட செயற்கைக் கோள்களை வான்வெளிக்கு அனுப்பும் ஒரு ஆம்னி பேருந்து நிறுவனமாக ISRO ஆகிவிடுமோ என்கிற பயம் சமீபத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் அது சார்ந்த விஞ்ஞானிகளின் தெருச்சண்டை மற்றும் அரசியல் வெளிவந்த போது இருந்தது.  அதை விடுத்து சந்திரயானைத் தொடங்கி செவ்வாய்க்கு நம் அணி போயிருப்பது நல்ல முன்னேற்றம். இன்னும் வேகம் மற்றும் உந்துதல் தேவை.

நிலவில் தண்ணீர் தடயங்கள் இருக்கிறது என்பதை தற்கொலை செய்து கொண்டு நிரூபித்த சந்திரயானின் கடைசி ரிசல்டை விட அது நிலவைச் சென்றடைந்த பாதை என்பது மிகுந்த சவால் வாய்ந்தது. திரில்லிங் கதை படிப்பதை விட சுவையானது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய நமது மக்கள் பாராட்டுக்குரியவர்களே.
Inline image 2

மேலும் அதையே மேம்படுத்தி தற்கொலை ராக்கெட்டாக அல்லாமல் அதை இன்னும் மேம்படுத்தவேண்டும். நிலவில் வெற்றி நடை போட ஒரு ஓடத்தைத் தயார் செய்ய வேண்டும். விண்வெளி ஆராய்சிக் கூடத்திற்கு ஆட்களை அனுப்ப சீனா ஆரம்பித்துவிட்ட நிலையில் அரசியல் ரீதியாகவும் அந்த பலத்தைப் பெற்றாகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

இந்த Mars Orbiter Mission மூலம் செவ்வாய்க்கு ஒரு செயற்கைக் கோளை அனுப்ப இருக்கின்றனர் நமது அறிஞர் பெருமக்கள். செவ்வாய்க்கு உயரே 100 கிமீக்குள்ளாக இந்த செயற்கைக் கோளை நிலை நிறுத்துகிறார்களாம். பருவநிலை, புவியியல் அமைப்பு, கிரகம் உருவான கதை என்று பலவற்றை ஆராய இந்த செயற்கைக்கோள் உதவும். 450 கோடியைத் தொடும் இந்த செயல்திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது. சரித்திரகால பயண நாயகன் PSLV இதைத் தூக்கிச் செல்கிறது.

Inline image 1

பிறப்பு கால இறப்பு – நோய் தடுப்பு – ஊட்டச்சத்து குறைவு என்று அத்தியாவசிய தேவைகள் இருக்கையில் இந்த செயல்திட்டம் அவசியமில்லை என்கிற கூற்றை ஏற்பதாயில்லை. இதே 450 கோடியை இந்த செயல்திட்டத்துக்குக் கொடுத்தாலும் ஊழல் என்கிற படித்த பாடமே திரும்ப பாடமாய் கிடைக்கும். புதிதாய் ஒரு பாடம் படிப்போம். இந்தியப் பார்வையில் செவ்வாய்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

https://groups.google.com/d/msg/tamilpayani/mL2kJnF5x1M/BO4saK5_zcYJ

 

ஒலிம்பிக்
ஒலிம்பிக் மகிழ்ச்சியைப் பகிர்வதாகவே இந்தப் பதிவு தொடங்கட்டும். ஒலிம்பிக் என்றதும் என்னளவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் துப்பாக்கி அபினவ். பாட்மிண்டன் சாய்னா.  அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அதை மறைத்தது ககனின் வெண்கலம். சபாசு.

Gagan Narang - Olympics 2012

Gagan Narang – Olympics 2012 – img (c) outlookindia.com

பாட்மிண்டன் பதக்கம் பெற்றுத் தரும் என்று என் மேலாளரிடம் கூறினேன்.  ஆனால் அரையிறுதி வரை சாய்னா வந்ததே பெரிய மெடல்தானே. சாய்னா மீது ஆரம்பம் முதலே ஆர்வம் அதிகம் காரணம் மீடியாக்கள் இவரை அதிகம் கவனிக்காமல் விட்டதன் கோபம் என்று சொல்லலாம்.  போகுமிடமெல்லாம் தோற்றாலும் சானியா மிர்ஸாவைத் தூக்கி வைத்து ஆடின. ஒரு பெண்ணை ஏமாற்றியதும் இல்லாமல் அது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தும் அழுகுணி ஆட்டம் ஆடிய ஒரு ஆண்குல சிங்கத்தைத் திருமணம் செய்தாலும் இன்னமும் சானியாவை தூக்கி வைத்துக் கொண்டாடும் ஜொள்ளர் குல திலக ரிப்போர்டர்களே என்னை சாய்னா பக்கம் சாய வைத்தார்கள் என்றும் சொல்லலாம். சிறிது சிறிதாக ஆரம்பித்து காமல்வெல்த் மற்றும் ஆசிய நாடுகளின் கோப்பையை வாரி வந்த சாய்னா நம்பிக்கை நட்சத்திரமே. அதுமில்லாமல் ஏமாற்றம் மற்றும் கடுப்பேற்றும் கிரிக்கெட் மற்றும் திறமையை விட ஈகோவால் எரிச்சலூட்டும் பூபதி பயஸ்… என்று எல்லாருமாக சேர்ந்து சாய்னா பக்கம் என்னை ஜே போட வைத்தார்கள் என்பதை ஒத்துக்கொண்டாகவேண்டும்.

Saina London 2012 Olympics

Saina London 2012 Olympics – img (c) sports.ndtv.com

எப்படிப் பார்த்தாலும் வெண்கலப்பதக்கத்திற்கான பந்தயம் அவ்வளவு எளிதாக அமைந்திருக்கவில்லை. முதல் செட்டை இழந்து நகத்தைக் கடிக்க வைத்து ஸின் வாங் காயம் காரணமாக வெளியேற அதனால் பதக்கத்தைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார் சாய்னா. ஆனால் அதைக் கொண்டாடாமல் தன் சக போட்டியாளரைப் (World Ranking 2) பற்றி நலம் விசாரித்தும், அதிர்டத்தால் மெடல் வந்தது என்கிற தோரணை ஏற்பட்டதால் தன் வெற்றியைக் கொண்டாடாமலும் தனது sportmanshipஐக் காட்டுகிறார்.

Saina Vs Xin Wang

Saina Vs Xin Wang – img (c) sports.ndtv.com

கொண்டாடக்கூடிய வகையில் இதை விட பெரிய வெற்றியைப் பதிவு செய்வார் என்றே நாம் நம்புவோம். விளம்பரம் மற்றும் அதில் வரும் பைசா இவரது திறமையை மங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

GOLD GOLD GO FOR GOLD

அவுட்லுக்
ஹாட்மெயில் போய் அவுட்லுக் வந்தது டும்டும்டும்
பெரிதாக சாதித்துவிட்டதாக “மைக்ரோசாப்ட் எதைச் செய்தாலும் உச்சுக் கொட்டுவோர் சங்க”த்தின் மதிப்புரைகளைப் படித்துவிட்டு எனக்கென்று ஒரு முகவரியையையும் பதிவு செய்தேன். அவ்வளவு பெரிய கம்பெனிக்கு அப்படி ஒரு கர்ண கொடூரமாய் ஓர் மின்னஞ்சல் சேவை. அதன் டிசைனரைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும்.
அனேகமாக விண்டோஸ் போன்களையும் டாப்களையும் தாக்குப்பிடிக்க வைக்க இந்த மின்னஞ்சல் சேவை உதவுதா பார்க்கலாம்

OUT of the fashion LOOK

மாண்டேக் சிங் அலுவாலியா


அய்யா அடங்கமாட்டார் போலிருக்கிறது. 2011-12ல வறுமை 29 %லிருந்து 26%சதமாகக் குறைந்துவிட்டது. டீசல் விலையை ஏத்தவிடலைன்னா பவர்கிரிட் பெயிலியர் மாதிரியான சம்பவங்கள் நிகழும் அப்டின்னு இந்த வாரம் ஏகத்துக்கும் கடுப்பேத்திட்டு இருக்கார். விலைவாசி ஏற்றம் ஒவ்வொருத்தன் பாக்கெட்டையும் கிழிச்சிருக்கு. நடுத்தர வர்க்கத்தின் அனைத்து தட்டுக்களையும் பாதித்திருக்கும்போது ஏழைகள் சதவீதம் எப்படிக் குறையும். ஒருவேளை இவன்தான் ஏழை அப்டிங்கிற விதிய மாத்திட்டாகளோ என்னவோ.

காங்கிரசின் கடுப்பேற்றல்
பவர் கிரிட் பெயிலியர் – பவர் மினிஸ்டர் ஷிண்டே உள்துறை அமைச்சராக மாற்றம்
(இது தண்டனையா வெகுமதியா?)
இதில் யாரையும் குறை சொல்ல அல்ல. ஏதோ ஒரு மாநிலம் எச்சாவாக கரண்டை உறிஞ்சிவிட்டார்கள். அதனால் கிரிட் கருகிவிட்டது என்கிறார்கள். நம்மால் அப்படிச் செய்ய முடியவில்லையே. இன்னமும் வடக்கு வாழ்ந்து தெற்கு தேய்வது தொடர்கிறது போல.

SHOCK

ஏர்இந்தியா ஈனாவானா
அந்நிய நாட்டுக்கு பயண வசதி வழங்கும் ஏர் இந்தியாவின் உரிமையை இனி ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் பயன்படுத்திக்கொள்ளும். காதிற்கு இனிக்கும் இந்த செய்தியை காங்கிரசின் எரிச்சலூட்டும் ஆளுமையின் அடுத்த அத்தியாயம் என்று வைத்துக் கொள்ளலாம். அடுத்த நாட்டிற்கும் நமக்குமான சமபங்கு உரிமையுள்ள வான் வெளியை அந்நிய விமான நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்துகின்றன. அதே நம் உரிமையைப் பயன்படுத்துகிறோமா இல்லை. அடுத்த நாட்டுக் காரன் விமானத்தில் நம்ம ஊருக்காரனை ஏத்தி அனுப்புவதில்தான் எத்தணை ஆனந்தம்?

Air India

Air India

ஏற்கனவே சந்தி சிரிக்கும் விமான உரிமை பயன்பாட்டில் இந்த அறிவிப்பு என்பது மூழ்கும் கப்பலில் ராக்கெட் லாஞ்சர் வைத்து அடித்தது போன்று இருக்கிறது. மோசமான பராமரிப்பு, ஏர்இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் அரைவேக்காட்டு இணைப்பு உண்டாக்கிய தொழிலாளர் புகைச்சல், அடிக்கடி ஸ்ட்ரைக், சுத்தமாக நம்பகத்தன்மை கெட்டுப்போனது என்று ஒன்னுக்குமத்த ஒரு பிராண்டாக ஏர் இந்தியா மாறிவிருகிறது. இதற்குத்தான் டாடா நிறுவனத்திடமிருந்து இதனைத் தட்டிப் பறித்தார்கள் போல.

தூர்தர்சன்
BSNL
AIR
AIR INDIA
ஆகியவை தூர்ந்து போவதற்குக் காரணம் எச்சக் காசை வாங்க நாக்கைத் தொங்கப் போட்டிருக்கும் அரசியல் மற்றும் நிர்வாக எத்தர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. இது எங்க போய் முடியப் போகிறது என்றுதான் தெரியவில்லை.

AIRless INDIA

பிரதிபா பாடீல் பரிசுப் பொருட்களை தன் வீட்டிற்கு லவட்டிச் சென்றது – அண்ணா கஜாரே கட்சி ஆரம்பிப்பதாய் சொல்லி பல்பு வாங்கிக் கொண்டிருப்பது – சீச்சீ..

பெட்ரோல் விலை உயர்வு பயத்தில் புலம்பும் உங்களுடன் நானும் சேர இந்தப் பதிவு.

படுத்துவது யார்? பெட்ரோலா? அரசா?

(c) IndiaTimes

(c) IndiaTimes

பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம் என்பது பல கட்டங்களையும் பாதிப்பதால் வலுவாய்ந்த அரசியல் ஒன்று எப்போதுமே அதை மையம் கொண்டிருக்கிறது. எண்ணைய் நிறுவனங்களின் வருமானம் – மத்திய மாநில அரசுகளின் வரிவருமானம் – தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்து வருமானம் – என்று பாடாய் படுத்தும் இந்த அரக்கனுக்கு புதிதாக ஒரு கொம்பினை வளர்த்து விட்டிருக்கிறது தனக்கான குழியைதானே தேடிக்கொண்டிருக்கும் காங்கிரசு அரசாங்கம்.  அது எண்ணைய் நிறுவனங்கள் தானே விலையை உயர்த்துவது என்று சிறு குழந்தை கூட சொல்லிவிடும். ஏறிய விலை ஏறியதுதான். குறைய வாய்ப்பே இல்லை என்பது நாம் கண்கூடாக அறிந்தது.

பாதாளம் வரை பாயும் எண்ணைய் – அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் கொடுமை

முழுக்க இறக்குமதியையும் அதற்காக டாலரின் பிருஷ்டத்தையும் தொங்கிக் கொண்டிருக்கும் நம் எரிபொருள் தத்துவம் என்றைக்கு மாறும். தனியார் நிறுவனங்கள் இந்த துறைக்கு நுழைந்திருக்கும் நிலையில் இனி காங்கிரசு அரசோ பா.ஜனதா அரசோ யாரும் இதைக் குறைய விடப்போவதில்லை. அவர்களால் குறைக்கவும் முடியாது. இந்தப் புறாக்களை வளர்த்துவிட்டுவிட்டு நாம் படும் பாடு. அப்பப்பா… பெரிய அக்கப்போறாக அல்லவா இருக்கிறது மக்கள் அனைவரும் 23ம் புலிகேசி மகராஜா கணக்காக புலம்புகிறார்கள். 3 வயதில் பள்ளி செல்லும்போதே நம் பிள்ளைகளை எரிபொருளை கரியாக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் நமது அரசாங்கத்தின் நிலை தெளிவாகத் தெரிகிறது. தினசரி காலியாகும் பொருளில் முதலீடு போட்டால்தானே வருமானம் வரும். அதன் வாயிலாக சாக்கு சாக்காக வரியை வசூலித்துக்கொண்டிருக்கிறது. அங்கே டீசல் எண்ணையில் வரும் மாற்றம் கடலை எண்ணைய் விலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கத்தெரிந்த அரசிற்கு சமையலரை எரிவாயு மானியம் சுமையாக உள்ளது. ஆக எரிபொருள் விலை உயர்வு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டு சமையலரையிலும் பட்டாசு கொளுத்திப் போடுகிறது.

அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று அரசாங்கம் மக்களை தன் பாதையில் திருப்பி அவர்களை வழிப்பறி செய்து கொண்டு உள்ளது.  கால்கிலோ நாவாய் பழம் (நவ்வாப் பழம்) கால் கிலோ 50 ரூபாய். என் காதுகளை என்னாலே நம்ப முடியவில்லை. சரி சீசன் சரியில்லைன்னு விடலாம். ஒரு பொட்டலம் ஈச்சம்பழம் 10 ரூபாய்.  தனிநபர் வருமானம் 5 இலக்க எண்ணாக சமீபத்திய நாளேட்டுச் செய்தி காட்டுகிறது. யார் யாருக்கு என்றுதான் தெரியவில்லை.

உருப்பிடாத அரசின் இல்லாத சைக்கிள் பாலிசி

அந்தந்த நாடுகளின் கரன்சியில் வியாபாரம் செய்தால் இதன் தாக்கம் கொஞ்சம் குறையலாம் என்கிறார்கள். அது எல்லாம் போகட்டும். ஒவ்வொரு பாக்கெட்டையும் குறி வைத்து அரசாங்கத்தாலும் அதன் பிண்ணனியில் தனியார்-பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களால் ஏவப்பட்டுள்ள இந்த எரிகணையை கொஞ்சமாவது குறைக்க சைக்கிள் உதவுமா என்றால் கண்டிப்பாக உதவும். பழையபடி சைக்கிளை அழுத்தி வியர்க்க விருவிருக்க ஆபீசு போவதா என்று எனக்கும் கொஞ்சம் அயற்சியாகத்தான் உள்ளது என்றாலும் அரசாங்கத்தின் மரமண்டையில் பணம் வரி என்கிற சிந்தனையிலிருந்து சைக்கிளுக்காக ஒரு பாலிசி செய்து கொடுத்தால் கண்டிப்பாக ஒவ்வொருத்தருக்கும் சைக்கிள் என்பது மிக்க பயனுள்ளதாகவும் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமையும். ஆனால் துரதிருஷ்ட வசமாக அதற்காக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இத்தணைக்கும் இது ஒன்றும் புதிது இல்லை. கோடி கோடியாக செலவு செய்து வெளிநாடு சென்று நம் நாட்டை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள
பிரதமர் மன்மோகன் -
சரித்தர தலைவி – வீட்டு நபர்கள் பால் கிரிமினல் வழக்குகள் இருந்த காலத்தில் இந்தியாவின் முதன்மைப் பெண்மணியாக இருக்க இவர்தான் தகுதியானவர் என்று சூத்திரதாரி சோனியாவால் முன்மொழியப்பட்ட ரிடையர் ஆகப்போகும் ஜனாதிபதி பிரதீபா பாடீல்
பிரச்சினை வரக்கூடிய இடத்தில் தன்னுடைய விசுவாசியான பெண்களை வைத்து தாயம் ஆடுவது காங்கிரசுக்கு வழக்கம்போல. அப்படி சபாநாயகர் ஆன மீராகுமார்
மற்றும் ஏனைய அமைச்சர் பெருமக்கள்…
இவர்கள் ஒருத்தருக்குக் கூடவா வெளிநாடுகளில் சைக்கிளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தெரியவில்லை?

இளமை மாறா சைக்கிள் உலகம்
பிரயாணங்களில் சைக்கிளைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன் என்று புரியவில்லை. என்ன பெரிய அசவுகரியம் வந்துவிடப்போகிறது இவர்களுக்கு? ஒரு சில எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொள்வோம்

1. திருச்சியிலிருந்து ரயில் அல்லது பேருந்து பிடித்து ஈரோடு செல்கிறார் ஒரு ஜவுளி வியாபாரி. இறங்கி நகரப்பேருந்து ஆட்டோ என்று அக்கப்போர்களுடன் துணி வாங்கி லாரியில் பார்சல் போடச்சொல்லி திரும்ப அக்கப்போர்களைப் பிடித்து வீடு வந்து சேர்கிறார்

2. புதுகைக்கு உரம் பூச்சி மருந்து வாங்க செல்கிறார் எங்க ஊர் விவசாயி. தினசரி இருவேளை மட்டுமே வரும் பேருந்தினை காலையில் பிடித்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் சென்று பொடி நடையாகச் சென்று வாங்க வேண்டியதை வாங்கி.. வந்தது வந்தோம் அதையும் வாங்கிவருவோம் என்று மளிகை ஜமான்களையும் வாங்கி கையில் ஒன்று தலையில் ஒன்று என்று என்று தூக்கி பேருந்து நிலையம் வந்து பக்கத்து ஊர் வண்டியைப் பிடித்து இறங்கி சொந்த ஊருக்கு திரும்ப போர்ட்டர் வேலையைத் தொடர்கிறார்

3. சென்னை தாம்பரத்தில் சைக்கிளைப் போட்டுவிட்டு அதற்கு காசு அழுது ரயில் பிடித்து கோடம்பாக்கம் இறங்கி நடைப்பயணமாக மீனாட்சி கல்லூரி செல்கிறார் ஒரு மாணவி.

4. நாள் முழுக்க காரில் பயணம் செய்துவிட்டு வீட்டில் சைக்கிளிங் எந்திரம் வாங்கிப் போடுகிறார் இன்னொருத்தர்

5. பல்லவனைப் பிடித்து சென்னை வந்து ஆட்டோ கால்டாக்சியில் வேலை முடித்து ராக்போர்ட்டில் திருச்சி திரும்பும் லோக்கல் தொபுலதிபர்!

இவர்களுக்கு நாளையிலிருந்து அரசாங்கம் செய்து தரும் வசதியால் இப்படிப் போனால்…?

Cycle Stand on a Railway platform

Cycle Stand on a Railway platform

1. வீட்டு வாசலில் சைக்கிளில் ஏறி திருச்சிப் பேருந்து நிலையம் சென்று திருச்சியிலிருந்து ரயில் அல்லது பேருந்து பிடித்து சைக்கிளுடன் ஈரோடு செல்கிறார் ஒரு ஜவுளி வியாபாரி. இறங்கி  சைக்கிளை எடுத்து துணி சந்தை சென்று துணி வாங்கி லாரியில் பார்சல் போடச்சொல்லி திரும்ப சைக்கிளுடன் வீடு வந்து சேர்கிறார்

2. புதுகைக்கு உரம் பூச்சி மருந்து வாங்க செல்கிறார் எங்க ஊர் விவசாயி. தினசரி இருவேளை மட்டுமே வரும் பேருந்தினை காலையில் பிடித்து சைக்கிளுடன் புதுக்கோட்டை பேருந்து நிலையம் சென்று இறங்கி சைக்கிளை மிதித்துச் சென்று வாங்க வேண்டியதை வாங்கி.. வந்தது வந்தோம் அதையும் வாங்கிவருவோம் என்று மளிகை ஜமான்களையும் வாங்கி கேரியரில் வைத்து பேருந்து நிலையம் வந்து பக்கத்து ஊர் வண்டியைப் பிடித்து இறங்கி சொந்த ஊருக்கு ஜமான்களை சைக்கிளில் வைத்து பயணத்தைத் தொடர்கிறார்

ரயில் பெட்டியில் நான்கு சைக்கிள்களை நிறுத்தலாம் என்கிற குறியீடு

ரயில் பெட்டியில் நான்கு சைக்கிள்களை நிறுத்தலாம் என்கிற குறியீடு

3. சென்னை தாம்பரத்தில் சைக்கிளை ரயிலில் வைத்து பூட்டிவிட்டு  கோடம்பாக்கம் இறங்கி சைக்கிளில் மீனாட்சி கல்லூரி செல்கிறார் ஒரு மாணவி.

4. சைக்கிளிங் செய்யும் நேரத்தில் சைக்கிளில் சென்று கீரை காய்கறி வாங்கி வருகிறார் :)

மடக்கி இருக்கைக்கு அருகையிலேயே வைக்கப்பட்டுள்ள சைக்கிள்

மடக்கி இருக்கைக்கு அருகையிலேயே வைக்கப்பட்டுள்ள சைக்கிள்

5. பல்லவனில் சைக்கிளுடன் ஜம்மென்று ஏறி அதன் வழி வேலைகளை முடித்து வீடு வந்து சேர்கிறார்.
ஆக.. இது எல்லாம் சாத்தியமா? நமது மன்னர்களுக்கு ஞானோதயம் வந்தால் சாத்தியமே. சைக்கிளில் கண்டுபிடிப்புகள் என்பது கியர் சைக்கிளுடன் நம்ப ஊரில் முடிந்துவிட்டது. அதையும் தாண்டி எளிதாக மிதிக்கும் வகையிலும் – மடக்கக்கூடிய வகையிலும் – தானே நகரக்கூடிய வகையிலும் பல நாடுகளில் ஓட்டிக்கொண்டுதானே உள்ளனர்?

மடக்கக்கி எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சைக்கிள்

மடக்கக்கி எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சைக்கிள்

வெள்ளையர்கள் நம்மை ஆண்டதால் அவர்களிடம் உள்ள இந்த நல்ல விதிகளைக் கூட காப்பியடிக்க நம் அரசர்கள் மறுக்கிறார்களோ?
பேருந்தில் சைக்கிள் – http://www.tfl.gov.uk/roadusers/cycling/11701.aspx#page-link-bus
ரயிலில் சைக்கிள் – http://www.nationalrail.co.uk/passenger_services/cyclists.html
ஐரோப்பிய நாடுகளைக் கிழித்துச் செல்லும் யூரோஸ்டார் ரயிலில் – http://www.eurostar.com/UK/uk/leisure/travel_information/at_the_station/bicycles.jsp
சூத்திரதாரி சோனியா காந்தியின் சொந்த நாடானா இத்தாலியில் – http://www.slowtrav.com/italy/bike/sw_trains.htm

தானே ஓடும் சைக்கிள் BSA வழங்குகிறதாம்! – http://www.bsahercules.com/Hercules-Hivolt.asp

ரேடியோவே அழிந்துவிடும் என்கிற நிலை இருந்த பொழுது அரசின் FM கொள்கை ரேடியோக்களை புதிய நிலைக்குக் கொண்டு சென்றது. அது மாதிரி ஒரு அதிசயம் சைக்கிளுக்கும் நடந்தால் நல்லது. ம்ம்.. கனவு காண்போம். பணத்தைப் பற்றியே சிந்திக்கும் வியாபாரிகளைத் தாண்டி சாலையில் நடந்து செல்லும் பாமரனுக்காகவும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய உதவிகளைச் செய்து தரும் என்று.

 

பொங்கலோ பொங்கல்

நரேந்திர மோடியும் அத்வானியும் துக்ளக் ஆண்டுவிழாவிற்கு வருகிறார்கள் என்றதும் அவசியம் செல்லவேண்டும் என்கிற ஆவல் வந்தது. காங்கிரசு தற்சமயம் நடத்தும் கொள்ளையடிப்பு அரசியலும் தமிழர் விரோத அரசியலும் அயற்சி அடையச் செய்யும் இடத்தில் – எதிர் வருகிற பாராளுமன்ற தேர்தலின் கூட்டணி தொடர்பானதாக இருக்கும் என்கிற அங்கு வந்திருந்த அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. அது தவிற அரசியல் கூட்டத்திற்குப் போய் நிறைய நாட்களும் ஆகிவிட்டது.

மாலை 6-30 மணிக்குத் துவங்கும் என்று போட்டு இருந்தார்கள். 6-20க்குத் தொடங்கியது. கொடுமை. நான் சென்ற எந்தக் கூட்டங்களும் காக்க வைத்த கூட்டங்களே. சரி விசியத்திற்கு வரலாம்.

விரிவாக சொல்லவேண்டிய வேலை எனக்கு இல்லை. பெரும்பாலான விசியங்களை இட்லி வடையில் பார்க்கலாம்.

எனக்குக் குறிப்பிட வேண்டும் என்கிற விசியங்களை மட்டும் இங்கே வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

1. சோ – அரசியல் சரவெடி

2. அத்வானி – சாந்த சொரூபி (வழக்கத்திற்கு மாறாக)

3. நரேந்திர மோடி – பொருளாதார செமினார்

தொடக்கமாக சோவின் சரவெடி

மன்மோகன் சிங்

manmohan-singh.jpg

நல்லா தெய்வத்தை வேண்டிக்கனும். நம்ம ஊரு தெய்வங்கள் எல்லாம் பத்தாது. அது நல்லது செய்யறதுக்கு மட்டும்தான் துணை வரும். ஆனால் நான் செய்யப்போகும் காரியத்திற்கு வேற சாமிய கும்பிடனும். நான் பேசறதில பிரச்சினை வரலாம். நான் ஊழல் பண்ணலாம். எல்லாத்தையும் காத்து நிக்கனும் ஓம் மன்மோகன சிங்காய நமக என்றதில் அரங்கம் அதிர்ந்தது.

எதற்குமே அவருக்கு கோவம் வரமாட்டேன் என்கிறது. தட்சிணாமூர்த்தி ஒரு மவுன குரு என்பார்கள். அதாவது குரு மவுனமாக இருப்பார். ஆனால் சீடர்களுக்கு விளங்கிவிடும். அது மாதிரி இவரும் மவுனமாகவே இருக்கிறார்.

“2ஜி வருது. கொஞ்சம் காசு பாத்துக்கலாம்னு பாக்கறேன்..” மவுனமா தலையசைக்கிறார்.

“பிரணாப் ஆபிசை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக்கலாம்னு பாக்கறேன்..” மவுனமா தலையசைக்கிறார்.

இப்படி எல்லாத்துக்கும் சைகையாலேயே சொல்லிட்டு கம்முன்னு இருக்கார்.

அவருக்கு எல்லார் மேலயும் confidence அதிகம். ஆராஜாவைப் பார்த்து I am confident on him னு சொன்னார். திகாருக்கே போயிட்டார். அடுத்து சிதம்பரத்தைப் பார்த்து I am confidentன்றார்.

அவருக்கு கபில் சிபல் போதும். எல்லாத்தையும் இல்லவே இல்லையே என்று மறுக்க.

lmhc4vhegdj.jpg

2ஜில ஊழலாமே – இல்லவே இல்லையே

அரசுக்கு நஷ்டமாமே – இல்லவே இல்லையே

சிதம்பரத்துக்குப் பங்கு இருக்காமே – இல்லவே இல்லையே

சிதம்பரத்துக்கு…. இல்லவே இல்லையே என்று சிதம்பரம்னாலே இல்லவே இல்லையே என்று பதில் சொல்லும் அளவிற்குப் போய்விட்டார்.

ஆனால் அவருக்கும் கோவம் வந்தது. அத்வானி மன்மோகனை weak prime minister என்று சொல்லிவிட்டாராம். அதனால் எல்லா பத்திரிகையாளர் கூட்டத்திலும் புலம்பித் தீர்த்தார். அத்வானி என்னை weak prime minister என்று சொல்லிட்டார். weak prime ministerனு சொல்லிட்டார். அத்வானி செய்தியைப் படிக்காதவர்கள் கூட இவர் சொல்வதைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள் போல.

உண்மையச் சொன்னா இப்டித்தான் கோவம் வரும்.

இப்ப என்னையே யாராவது திட்டனும்னா.. அவன் போறான் பைத்தியக்காரன்னு சொன்னா.. யாரோ பாமகவைப் பத்திச் சொல்றாங்கன்னு நினைப்பேன். அவன் போறான் சொறணை கெட்டவன்னு சொன்னா – யாரோ கம்யூனிஸ்டு பத்தி சொல்றாங்கன்னு நினைப்பேன். மொட்டைத்தலையன்னு சொன்னா கோவம் வரும் இல்லையா. அது மாதிரிதான்.

2319969987_843a82bcb1.jpg

என் பின்னாடி இருக்கிறவர் கேட்டாரு. தேவ கவுடாவை விட இவர் weak prime ministerஆ என்று. ஆமாம். தேவ கவுடாவிற்கு ஒரு தைரியம் இருந்தது. தூங்கனும்னு நினைச்சா தூங்கிடுவார். ஆனால் இவரால அது கூட முடியலையே.

அன்னா ஹசாரே

இவர் என்ன சொல்றாருன்னே புரியலை. குடிக்கிறவன கட்டி வெச்சு அடிக்கனும்கிறார். அமைச்சர்களை கெரோ செய்னு சொல்றார். உண்ணாவிரதம் இருக்கப் போறேன்றார். அரசு பணிஞ்சு வந்திடுச்சு. உண்ணாவிரதம் இல்லைங்கிறார். அரசு ஏமாத்திடுச்சு திரும்ப உண்ணாவிரதம் கிறார். உடம்பு சரியில்லைங்கிறார். ஒரு நாள் பட்டினி கிடந்தால் உடல் சரியில்லாம போகுது. அத்தணை வயசாச்சு. பாகிஸ்தானுடன் போர் வந்தால் போவேன்றார். இவரப் போய் காந்திய வாதின்னு சொல்றாங்க. விநாயகர் பீடியில விநாயகருக்கும் பீடிக்கும் என்ன சம்பந்தமோ அவ்வளவுதான் அன்னாவுக்கும் காந்தியத்திற்கும்! இப்ப என்ன பன்றதுன்னே தெரியலைங்கிறாங்க. நீங்க எதாவது சொல்லுங்கன்றாங்க.

40957b36-c72e-4637-84b6-974c5e53a2c3HiRes.JPG

ஒருத்தன் இரவு தூங்கும்போது கனா கண்டானாம். ஒரு நாய் சுவரை அங்கிட்டும் இங்கிட்டும் தாண்டுவதாக. அடுத்த நாள் பஞ்சாயங்காரை (குறி சொல்பவர்) அணுகி அந்தக் கனவின் பொருள் என்ன என்று கேட்டானாம். பைத்தியக்காரன் அகப்பட்டான் என்கிற மகிழ்ச்சியில் பஞ்சாயமும் “நாய் சுவரைத் தாண்டுவதே கெட்டது. ரெண்டு தடவை தாண்டியிருக்குதுன்னா.. குடும்பமே நாசம்தான்” என்று கூற.. “அதுக்கு என்ன பண்ணனும்”னு இவன் கேக்க. “எனக்கு 100 எறுமை மாடு தட்சணையா கொடு. நான் அசண்டாள யாகம் நடத்தறேன். எல்லாம் சரியாப் போயிடும்”னு அளந்து.. 100 எறுமை மாடுகள் காணிக்கையுடன் அசண்டாள யோகம் நடக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு யாகத்தை கெஜ்ரிவால் அன்னா கஜரேக்கு நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே சாந்தி பூசன் வருகிறார். அவன் இன்னொரு பஞ்சாயஞ்காரு. என்னடா இவன் நம்ப பொழப்ப கெடுத்திடுவானே என்று யாக மொழியிலேயே “100 எறுமை காணிக்கையில அசண்டாள யாகம்… உனக்குப் பாதி எனக்குப் பாதி. காரியத்தைக் கெடுக்காதே” என்று சிக்னல் கொடுக்க சாந்தி பூசனும் மந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்…. இப்படித்தான் இந்தப் போராட்டம் போனது. அவர்களுக்கு உள்ளேயே பிரச்சினைகள். அவர்கள் மீதான மோசடி புகார்கள். இந்த அம்மா கிரண்பேடி பெரிய கொடியை எடுத்து ஆட்டிக்கிட்டு இருக்கு. இந்த கிரிக்கெட்ல வர சியர் கேர்ள் மாதிரி. டிவியின் போக்கிரித்தனத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. டிவியில வரது எல்லாம் மெகாசீரியல் மாதிரி. பார்க்க interestingஆ இருக்கும். பார்க்கிறதோட விட்டுடனும்.

47759afb-c5bf-4a7a-922d-bb3a97c93cb7HiRes.JPG

ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தோல்வி அடையும்போது ஊழலுக்கு எதிராகப் போரிட்டால் இதுதான் கதி என்று மற்றவர்கள் எண்ணுவதற்கு வாய்ப்பாகப் போகும்.

நக்கீரன்
முதல்வரைப் பற்றி இவ்வளவு அவதூறாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதே. அதை பத்திரிகைகள் பெரிதாக கண்டிக்கவில்லையே. உங்கள் கருத்து என்ன என்று சோவிடம் கேட்டார்கள்

 

Nakkheeran-07-01-2012-Moviezzworld.com_-150x150.jpg(தனிப்பட்ட முறையில் தினமணி ஒரு தலையங்கமே எழுதியது. தவிறவும் அந்த செய்தியில் பிழை என்று நான் நம்பவில்லை. உண்மையைச் சொல்லிவிட்டார்களே என்கிற ஆத்திரம் வேண்டுமானால் இருக்கலாம். இதைப்பற்றி விரிவாக எழுதினால் சோவைப் பற்றி எழுதினால் பிராமண அடிவருடி என்றும். பீப் கதையைப் பற்றிப் பேசுவதால் பிராமண எதிரி என்றும் ஊர் மக்கள் அனைவராலும் நான் அன்போடு போற்றப்பட்டு விடுவேன் என்பதால் நிற்க.)


அந்தப் பத்திரிகையில் அவ்வாறு ஒரு செய்தி வந்தது ஆச்சரியப் படத்தக்கது அல்ல. அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. அது அவர்கள் குணம். அட்டை செய்தியாகப் போட்டதை வேண்டுமென்றால் தவறு என்று எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான பத்திரிகைகள் an objectionable content, a debatable content என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் இந்து பத்திரிகை நடந்து கொண்டவிதம் ஆச்சரியம் தரத்தக்கதாய் இருந்தது. நக்கீரன் செய்தியை வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அதுதான் ஆச்சரியம். இந்து என்றால் நியூயார்க் டைம்சில் இருந்து மேற்கோள் காட்டுவார்கள். இன்ன பிற பெரிய பத்திரிகைகளைக் காட்டுவார்கள். நக்கீரன் செய்தியை மேற்கோள் காட்டும் அளவற்கு தரம் தாழ்ந்துவிட்டார்களா என்றால் இல்லை. இது வேண்டும் என்றே செய்யப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. நக்கீரன் செய்தியைப் படிக்காதவர்களும் இதைப் படித்து செய்தியைத் தெரிந்து கொண்டார்கள்.

(இதைக் கேட்டதும் எனக்கு நினைவிற்கு வந்தது.
கடந்த முறை இந்து உட்பட்ட சில பத்திரிகைகள் மீது ஜெ அடக்குமுறைகளை ஏவினார். இந்துப் பத்திரிகையாளர்கள் தஞ்சம் தேடி பெங்களூர் எல்லாம் ஓடினார்கள். அந்த சமயத்தில் சோ இந்துவுக்காகப் பரிந்து பேசினார். “இந்துப் பத்திரிகையில் வந்தது ஒரு பிரச்சினைக்குரிய செய்தி அல்ல. “எதிர் கட்சிகளுக்கு வசை மாறி பொழிந்தது” இது மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள்தான் இருந்தன. தவிற அந்தப் பத்திரிகையில் வந்தது ஒரு reporting செய்திதான். தன்கருத்தைக் கூட அந்த செய்தியாளர் ஏற்றிக் கூறவில்லை”)

இலவசம்
முதலில் சில வாசகர்களைப் பேச அழைத்தனர். முதலில் வந்த பெண்மணி – இலவசங்களை தமிழகத்தை விட்டு ஒழிக்க இயலாதா என்றார்.

jayalalitha_illus_20110425.jpg

இலசங்கள் ஒழியவேண்டும் என்பது ஒரு ideal நிலை. அதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்கவேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே உடல் நலக் காப்பீடு, வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவி என்று இலவசங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அதிமுகவும் இலவசங்களை அறிவித்தது. எதிரில் திமுக இலவசங்களை அறிவித்ததால் வேறு வழியில்லை. இலவசங்களை அறிவிக்காவிட்டால் திமுக ஆட்சியை அகற்ற இயலாது. அந்த அளவிற்கு மக்கள் இலவசங்களுக்குப் பழகிப் போயிருந்தார்கள். இலவசங்களைக் குறைத்துக் கொள்வது எதிர்காலத்தில் செய்யவேண்டும்.

மோடி பிரதமர்

நரேந்திர மோடியும் அத்வானியும் அமர்ந்திருந்த அதே அம்மணி இன்னொரு திரியையும் கொளுத்திப் போட்டார்.
மோடி பிரதமராவதற்கு நீங்கள் உங்கள் நண்பர் அத்வானியிடம் சிபாரிசு செய்யக்கூடாதா?

பெண்களைப் பேசினாலே பிரச்சினைதான்… மோடி பிரதமராகனும் என்று நீங்க நினைக்கிறீங்க. நானும்தான் நினைக்கிறேன். ஆனால் இது மக்களால் முடிவு செய்யப்படவேண்டியது என்று நாசூக்காக அதற்குப் பதில் சொல்லமலே நழுவினார்.

சசிகலா
சசிகலாவை வெளியேற்றியதில் உங்கள் பங்கு என்ன. அதைக் கேட்கத்தான் இங்கே அனைவரும் வந்திருக்கிறோம் என்றார் இன்னொருத்தர்.

நீங்க அத்வானி பேச்சைக் கேட்க வரலை. மோடி பேச்சைக் கேட்க வரலை. சசிகலா பற்றிக் கேட்கத்தான் வந்திருக்கீங்க.. உங்களை எல்லாம் அவர் இன்சல்ட் பண்ணிட்டார் என்று கடைசி வரை அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லை.
What she had done is a surgical operation. How beautifully she had done it. தவறு நடக்கிறது என்று தெரிந்தவுடன் அவர் எப்படி நடவடிக்கை எடுத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம். அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தார் இப்படி நடந்து கொண்டிருக்க தைரியமே இருக்காது.

சீனா
கோவை காரமடையில் இருந்த வாசகர் கூறினார். சீனா நமக்கு எதிரி. அதை எதிர் கொள்ள மோடி பிரதமரானால்தான் சரிப்பட்டுவரும்.
Modi_china-2.jpg
சீனாவைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை. சொல்லப்போனால் எல்லாரையும் விட சீனா மோடிக்கு நண்பன். நாம் நமது உள் கட்டமைப்பு நமது திறன்களைப் பெருக்கிக் கொண்டாலே போதும்.

விலைவாசி
விலைவாசி என்று வரும்போதெல்லாம் நீங்கள் அதை ஆதரித்தே எழுதுகிறீர்கள். கீழ்தட்டு மக்களை அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது. மேல்தட்டு மக்கள் விலைவாசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை. நடுத்தர மக்கள்தான் கஷ்டப்படுகின்றனர். அதற்காக வரிச்சலுகை அதிகம் தர தாங்கள் பரிந்துரைக்கக் கூடாதா என்றார் ஒரு ஹைதை வாசகர்.
1207549007678.jpg
விலைவாசி என்பது இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. சுதந்திரத்தின் போது என்ன விலை. தற்போது என்ன விலை என்று யோசித்தால் புரிந்து போகும். இதற்காக அரசாங்கம் எல்லாத்தையும் மானியத்திலா கொடுக்க முடியும். அப்படிக் கொடுத்தால் அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது எனது கருத்து.

கருணாநிதி
பீர்மேடு தேவிகுளம் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்கவேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே. அதுவும் புத்திசாலித்தனமாக சொல்லியிருக்கிறாரே. அது அப்போதைக்கு இருந்த கவர்னரின் தவறு என்கிறார். உங்கள் கருத்து என்ன? (அந்த வாசகர் கேள்வி கேட்டதை நான் ரசிக்கவில்லை. பொதுவாகவே கிண்டல் பண்ணவேண்டும் என்கிற தொணியே இருந்தது)

2008051953070401.jpg

அவருக்கு என்ன பேசறதுன்னு தெரியலை. நாம செம அடி வாங்கினா தலை சுத்திரும். எங்க இருக்கோம். என்ன பேசறோம்னே தெரியாது. அதுமாதிரி கடந்த தேர்தலில் வாங்கிய அடியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. டைம் ஆகும். ஆனால் மீண்டுவிடுவார். நானும் ஏதாவது சொல்லனுமே என்பதற்காக சொல்லிட்டு இருக்கார். என்ன சொல்றாருன்னு அவருக்கே தெரியலை. தேர்தல் கமிசன் சதி செய்தது என்றார். இவங்க பணம் கொடுத்தத அவங்க தடுத்திட்டாங்களாம். அனுமதிச்சிருக்கனும். பிறகு எதிர் கட்சிகள் சதின்னு சொன்னார். பிறகு பார்ப்பனர்கள் சூழ்ச்சி காரணம் என்றார். அதாவது விஜயகாந்த் அய்யர். தா.பாண்டிய ராவ். கிருஷ்ணசாமி கணபாடிகள் மற்றும் சரத்குமார சாஸ்திரிகள் என்ற பார்ப்பனர்கள் ஒன்றாகச் சேர்த்து அவரைத் தோற்கடித்துவிட்டார்கள். கடைசியில் நான்தான் காரணம்ன்னார். பாவம் என்னதான் செய்வார்.

ஒரு ஓட்டுக்கு 2000 3000னு கொடுத்தார். பணத்தை நம்பினார். எப்படியும் வென்றுவிடுவோம் என்று. எப்படியும் ஓட்டுவிழுகப்போவதில்லை என்று உணர்ந்த கட்சி ஆட்களே… எதறகு இந்தப் பணத்தையும் இழக்கவேண்டும் என்று பெரும்பாலான இடங்களில் பணத்தை இறக்கவே இல்லை.

நாங்கள் ராவண வம்சம்ங்கிறார். இராமாயணத்தைப் பற்றிப் பேசினால் ஒரு உளரல் கூட உளராமல் இருப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு உள்ளார். இராமன் 14 வருடம் வனவாசம் செய்தபோது தாடகையை வீழ்த்தினான்கிறார். தாடகையை வீழ்த்தியது இராமனின் சிறு பிராயத்தில். விசுவாமித்திரருடன் செல்லும்போது. சூர்ப்பநகைக்கும் தாடகைக்கும் இவருக்கு வித்தியாசம் தெரிவதில்லை.

கருணாநிதியைப் பற்றி புகழ்ந்து ஏதாவது சொல்லக்கூடாதா என்று துண்டு சீட்டு கொடுத்துவிட்டார்கள்.
என்ன சொல்றது. என்னை யாராவது புகழ்ந்து பேசினால் எனக்கு காதுகள் செவிடாகிவிடுகிறது என்றார். அவரைப் பற்றி புகழ்ந்து பேசி என்ன செய்ய? அதற்காகத்தான் கடந்த ஆட்சியில் அவரை எல்லாரும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள். கவிஞர்கள் புகழ்ந்தார்கள். சினிமா டெக்னிசியன்கள் புகழ்ந்தார்கள்.
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்”
“ம்ம்ம்ம் என்ன சொன்னே… காது கேக்கலையாம்”
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்” – சற்று உரக்க
“ம்ம்ம்ம் என்ன சொன்னே…
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்” – சத்தமாக
“ம்ம்ம்ம் என்ன சொன்னே…

இப்படிப் புகழ்ந்து புகழ்ந்தே அவரை ஒரு இடத்தில் உக்கார வெச்சிட்டோம். என்ன. எல்லாரும் புகழ்ந்ததை அவர் நம்பிட்டார்.

முல்லைப் பெரியாறும் ஜெவும்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்த அம்மாவின் உறுதியை நீங்கள் பார்க்கவேண்டும். தமிழக நலனில் எந்த அளவும் விட்டுக்கொடுக்க இயலாது என்று எவ்வளவு ஆணித்தனமாகச் சொல்கிறார். இந்நிலையில் கருணாநிதி இருந்தால் இன்னேரம் கடிதம் எழுதியிருப்பார். பல தடவை டெல்லிக்குப் போகிறார். ஜாமீன் அது இதுன்னு என்னவோ வாங்க போகிறார். இந்தப் பிரச்சினைக்கு கடிதம் எழுதுவார். மத்தியில் நடப்பது அவர்களது ஆட்சி. அவர்களின் எம்பிக்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள். இவர் கடிதம் எழுதுவார். எப்படி இருக்கிறது தெரியுமா. ஒரே விட்டுக்குள்ள உட்காரந்து கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் லெட்டர் போட்டுக்கொள்வது போன்றது.
vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg
கேரளாவில் நடப்பது ஒரு அரசா. நீதி மன்ற உத்தரவையே மீறுகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணலாம். ஆனால் பண்ண மாட்டார்கள். ஏன்னா அங்கதான் காங்கிரசிற்கு கொஞ்சமாவது ஓட்டு இருக்கு.

இங்கே வீரமணி போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். உச்ச நீதி மன்ற உத்தரவை கேரள அரசு மீறலாமா என்று. வழிகாட்டியது யார்? இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் அதிகமாக இட ஒதுக்கீடு கொண்டு வந்ததி யார்?

கூடங்குளம்
கூடங்குளம் பத்தி பேசனும் என்றார்கள்.
Koodankulam-protest-300x200.jpg
கூடங்குளம் எங்க போகும். வந்தே தீறும். அவ்வளவு செலவு பண்ணிட்டு எப்படி வராமல் போகும். வந்தே தீறும். அது காலத்தின் கட்டாயம். அந்தப் போராட்டம் யாரோ ஸ்பான்ஸர் செய்வது.

FDI
சில்லறை முதலீடுகளில் அந்நிய முதலீடு தப்பில்லை என்பது எனது கருத்து. அது ஒரு ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கும். காலாவதியான பொருட்களைத் தரான். எடை ஏய்ப்பு செய்யறான். தங்களின் உலகலாவிய பெயர் கெட்டுவிடும் என்பதற்காக அந்த நிறுவனங்கள் கவனமாக இருப்பார்கள். தவிற இதனால் விவசாயிகளுக்கும் இலாபம்தான். இடையில் உள்ள தரகர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே FDI தவறில்லை

பாஜக
பாஜக எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?
ஒற்றைமையாக இருந்தால் போதும்.
bjp48.gif
தற்போதிருக்கும் பிரச்சினைகளில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல பாஜகவினால் மட்டும்தான் முடியும். அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. காங்கிரசை எடுத்தால் சோனியாவை விட்டால் ஆள் கிடையாது. திமுகவில் கருணாநிதியை விட்டால் ஆள் கிடையாது. அதிமுகவில் முன்னர் எம்ஜுஆரை விட்டால் ஆள் கிடையாது. இப்ப ஜெவை விட்டால் ஆள்விடையாது. என்று எல்லா இடத்திலும் ஒரு discipline இருக்கிறது. பாஜகவில் அது இல்லை. அனைவருக்கும் திறமை உள்ளதால் வரும் பிரச்சினை உள்ளது. இவரை விட்டா ஆள்கிடையாது என்கிற நிலை பாஜகவில் இல்லை.

ஜெயலலிதா – மோடி – மத்தியில் ஆட்சி
ஜெவுக்கும் மோடிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இந்திய முதல்வர்களில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆண்மை வேறு யாருக்கும் இல்லை. மத்தியிலிருந்து எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில் இவர்கள் perform பண்ணுகிறார்கள். (ஜெ என்ன செய்தார்??????) பல நாடுகளிலிருந்து தொழில் முனைவோர்கள் வருகிறார்கள். பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. குஜராத்தில். இப்படி திறமை இருக்கும் ஒருவரை தேசிய அளவிற்கு தள்ளி ஆகவேண்டும். செய்யவில்லை என்றால் அது நாம் செய்யும் முட்டாள்தனம்.

tamil1.jpg

தமிழகத்தில் நமக்கிருக்கும் நிலைமை வேறு. ஐந்து வருட காலம் காரை ஒருத்தர் ஓட்டுகிறார். அப்புறம் அவரை அகற்றிவிட்டு இன்னொரு டிரைவரைப் போடுகிறோம். அந்த டிரைவருக்கு தன் ஒட்டு மொத்த குடும்பத்தையே காரில் ஏற்றிச் செல்லவேண்டிய நிர்பந்தம். காரின் திறனுக்கு மீறி ஏற்றுவதால் கார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுத்தமாக ரிப்பேராகிவிடுகிறது மீண்டும் ஆட்சியில் திரும்ப கட்டவேண்டி உள்ளது. இதற்கு என்ன செய்யவேண்டும். சிலவற்றை மீதமில்லாமல் அழிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். கடன் பகை இவைகளை. இல்லாவிட்டால் திரும்ப திரும்ப வளரும். இதை அதிமுககாரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

மோடி பிரதமராகவேண்டும். அதற்குண்டான உதவிகளை அதிமுக செய்ய வேண்டும்.  ஆனால் secularism பேசி சிலர் மோடியை எதிர்க்கிறார்கள். அப்படி ஒரு பிரச்சினை வந்து பாஜக ஆதரவு பெற்ற ஒருவர் பிரதமராகலாம் என்கிற நிலை வந்தால் ஜெவுக்கு பாஜக ஆதரவு தரவேண்டும்.

அத்வானி
திமுகவை இவ்வளவு நான் விமர்சித்தாலும் அண்ணாத்துரையிடம் உள்ள ஒரு நல்ல விசியம், மற்றவர்களை வளர்த்து விடுவது. இவன் வளர்ந்தால் நமக்குப் பிரச்சினை ஆகுமோ என்று நினைக்காமல் பலரையும் வளர்த்துவிட்டார். அதுமாதிரிதான் அத்வானியும். அத்வானி பிரதமராக வாய்ப்புகள் இருந்தபோதும் என்னை விட வாஜ்பேயி சிறந்தவர். அவர் கைகளில் தேசம் ஒப்படைக்கப்படவேண்டும். இன்று பிரதமர் பதவிக்கு அத்வானியை விட்டால் வேறு யாருக்காவது தகுதி இருக்கிறதா. பாஜகவை வளர்த்தவர் இவர். இவருக்கு உள்ள தேசபக்தி, தனிநபர் திறன் மற்றும் அனுபவம் வேறு யாருக்கும் இல்லை. இவர் வந்தாலே எழுந்து நிற்கத் தோன்றுகிறது. 40 ஆண்டு காலமாக அரசியலில் உள்ள இவர் 19 மாதங்களை சிறையில் கழித்திருக்கிறார்.

அத்வானி விமானத்தைப் பிடிக்க இருப்பதால் அவரை முதலில் பேச அழைக்கிறேன் என்று ஆங்கிலத்தில் அழைத்தார். (ஏன் இப்ப ஆங்கிலம்???)

அத்வானி பேச்சு
அத்வானியின் பேச்சில் வழக்கமான காரம் இல்லை. ஏதோ நண்பர் இடத்திற்கு வந்து பேசும் அரட்டை அடிக்கும் தொணியும் அதிமுகவை அழைக்கும் காரியமுமே தெரிந்தது.

CHO_RAMASWAMY_L_K_A_893394f.jpg

தமிழகத்தில் பொங்கல் என்கிறார்கள். கேரளாவில் சங்கராந்தி என்கிறார்கள். வட மாநிலங்களில் உத்தராயன் என்கிறார்கள். இந்த நாள் இந்தியா முழுமைக்கும் விசேடமான நாளாகவே இருக்கிறது.

அத்வானி மோடி
மோடி பிரதமராக வேண்டி இங்கே ஒரு பெண் கூறினார். இதே கேள்வியை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இன்னொரு பெண் நிருபர் கேட்டார். பொதுவாக இந்தக் கேள்வியை பெண்களே கேட்கிறார்கள். நான் அவரிடத்தில் சொன்னேன். பொதுவாக நாங்கள் ஒரு குடும்பம். அனைவரையும் அனைவரும் நாங்கள் அறிவோம். ஒரு குடும்பத்தில் இளைய தலைமுறையினர் வளர்கிறார்கள் என்றால் வளர்கிறார்களே என்று நினைக்கமாட்டார்கள். பெறுமைதான் கொள்கிறார்கள். அதன்படி நானும் நரேந்திர மோடியைப் பார்த்து பெறுமை கொள்கிறேன்.

குஜராத்
நான் வாழ்வின் 19 20 வருடங்களை சிந்துவில் கழித்தவன். கராச்சியில். பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் கொலைகள் இந்துக்களை புலம் பெற வைத்தது. அப்போது குஜராத்திற்கு புலம் பெயரலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். என் பாட்டி 80 வயதில் இருந்தார். இனி நான் எவ்வளவு காலம் வாழ்வேன் என்று தெரியாது. எனவே என்னை காசியில் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்றார். நல்ல சாப்பாடு வேண்டுமா சூரத் போ. நல்ல சாவு வேண்டுமா காசிக்குப் போ என்கிற சொலவடை அப்போது இருந்தது. அந்த அளவிற்கு குஜராத் அப்போதே சிறந்து விளங்கியது.

narendra-modi-kites-india.jpg

இதே நாளில் உத்தராயன் விழாவில் பட்டம் விடுவது குஜராத் பஞ்சாப் மாநிலங்களில் வழக்கம். தற்போது நரேந்திர பாய் (சகோதரராஆஆஆம்) குஜராத் மாநிலத்தில் செய்திருக்கிற மாற்றங்களைப் பாருங்கள். யாராவது குஜராத் சமீபத்தில் போயிருக்கிறீர்களா. போய் பாருங்கள். அங்கே செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாருங்கள். பட்டம் விடும் விழாவை ஒரு சர்வதேச விழாவாக மாற்றியிருக்கிறார் மோடி. இன்றும் பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பட்டம் விடும் பழக்கம் இருக்கிறது. இது இந்து மத பழக்கம். பட்டம் விடக்கூடாது என்று பாகிஸ்தான் அரசு சட்டம் போட்டு உள்ளது.

இன்று சோ கேட்டுக் கொண்டதற்கிணங்க நரேந்திர மோடியுடன் பயணம் செய்தேன். அதே போல முன்பு வாஜ்பேயியுடன் பயணம் செய்தேன். அவரது தேசபக்தி மொழிப்புலமை கிண்டல் நகைச்சுவை திறன் நிறைந்த பேச்சாற்றலைக் கண் ஆகியவற்றைக் கண்டபோது இவரிடம்தான் நாட்டை ஒப்படைக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். பின்னாளில் கட்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொன்னார்கள்.
என்னால் முடியாது
ஏன்
என்னால் அப்படி பெரிய கூட்டங்களில் பேச இயலாது.
பார்லிமெண்டில் மாத்திரம் பேசுகிறீர்களே
பார்லிமெண்ட் வேறு கதை (சிரிப்பலை எழுகிறது)
இங்கே பெரிய கூட்டம் வரும். அவர்களைப் பேச்சாற்றல் மூலம் கட்டிப்போடுதல் என்னால் ஆகாது என்று கூறினேன்.

இதைப்போன்று நகைச்சுவை ததும்ப பேச சோவினால் மட்டுமே முடியும். அன்று நிறைய பேர் நகைச்சுவை நிறம்ப பேசினார்கள். இப்போது பார்லிமெண்டில் கூட நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது. எமர்ஜன்சி காலத்தில் கூட பார்லிமெண்டில் நகைச்சுவை மிகுந்திருந்தது என்பதை நீங்கள் நம்புவீர்களா. மது தந்தவதே போன்றவர்கள் டைமிங் அறிவு மிகுந்தவர்களாக இருந்தனர்.
Madhu_Dandavate_300.jpg

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் கட்சி கூட்டத்திற்காக கர்நாடகா சென்றிருந்தோம். திடீரென்று எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நீதிபதியே ஆச்சரியப்பட்டு யார் யார் வந்தார்கள். பெயர்கள் கூட போலிசாருக்கு சரியாகத் தெரியாது. ஆனால் அத்தணை பேரையும் கைது செய்து பெங்களூர் மத்திய சிறையில் அடைத்துவிட்டார்கள் என்று கூறினார். தீடீரென்று எங்களிடம் வந்தார்கள். உங்களுக்கான ரீலீஸ் ஆர்டர் வந்துவிட்டது. நீங்கள் விடுதலை ஆகிறீர்கள் என்றார்கள்.

இல்லை. அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. சரியாகக் கேளுங்கள் என்றேன். இல்லை. விடுதலை என்றார்கள். சரி அவர்களே சொல்கிறார்கள். கிளம்பலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். சிறையை விட்டு வெளியே வந்தோம். இன்னொரு போலீசு ஜீப் தயாராக இருந்தது. You are under arrest என்றார்கள் (சிரிப்பலை). கைது செய்து ஹரியானா ரோதங் சிறைக்குக் கொண்டு சென்றார்கள். சரியான மழை. ஆடைகள் எல்லாம் நனைந்து சிறைக்குச் சென்றோம். அப்போது நள்ளிரவு 1-30 மணி. ஜெயில் சூப்பிரண்டு இல்லை. சப் சூப்பிரண்டு மட்டும் இருந்தார். அவர் எங்கள் உடமைகளை அக்கு வேறு ஆணி வேறாக சோதனை இட்டார்கள். அப்போது மது தந்தவதேயின் செருப்பு சற்று பிளந்து கொண்டிருந்தது. சூப்பிரண்டு இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிய்த்து ஆராய்ந்தார். பிரதமர் நேற்றுதான் நம் ஆன்மாவைத் தேடவேண்டும் என்று சொன்னார். அதான் தேடுறார் போல என்றார். இது போன்று சோவின் ஒவ்வொரு வாக்கியமும் சிரிப்பலையை உண்டாக்குகிறது.

(கடந்த அத்வானி ரத யாத்திரையின் போது குண்டு விசியம் அனைவரும் அறிந்ததே. அதைப் பேசி ஜெ ஒரு natural ally என்றார். அதை விவரிக்கவேண்டிய அவசியம் இருக்காது. நாளிதழ்கள் பிரசுரித்துள்ளன)

Weak Prime Minister
8783DFB321A2EC0CE39AD9A7D435.jpg
நான் மன்மோகனை வீக் பிரதமர் என்று சொன்னதைப் பற்றி சோ குறிப்பிட்டார். வேற என்ன சொல்லுவது. தொட்டது தொன்னூறுக்கும் 10 ஜன்பத் சாலையையே பார்த்துக் அப்படித்தான் கூற வேண்டும். அமெரிக்காவிடம் பேசவெண்டும் என்றால் ஒபாமாவிடம் பேசினால் போதும். நாம் வைத்திருப்பது Prime ministerial system. இங்கே பிரதமர்தான் நம்பர் 1. ஆனால் அவரோ வேறு யார் அனுமதிக்கோ காத்திருக்கிறார். நான் என் வாழ்வில் சில காலம் பத்திரிகையாளனாக ராஜுஸ்தானில் பணியாற்றியதுண்டு. அப்போது ஒரு சமயம் USSRலிருந்து கம்யூனிச தலைவர்கள் இருவர் வந்தனர் (பேர் சொன்னார் விளங்கவில்லை) . அப்போது அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு அறிவுறை வந்தது. அந்த நாட்டு கம்யூனிஸ்ட் சீனியாரிடி படி தலைவர் பெயர்தான் கவரேஜ் செய்யப்படவேண்டும். இரண்டாமவரைப் பற்றி செய்தி போடாவிட்டாலும் பரவாயில்லை என்று. அது போன்ற கட்சி சார்ந்த ஒரு நிலையை சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் பார்க்கிறேன். உலகில் வேறு எந்த இடத்திலும் இது போன்ற நிலை இல்லை.

10 ஜன்பத்தில் அத்வானி!
1151_b_0312a662fb660e4cf26378f9c65d944c.jpg
ஆச்சரியத்தக்க வகையில் நானே ஒரு சமயம் 10 ஜன்பத் சாலையில் நான் வசிக்கும் சூழல் வந்தது. விபிசிங் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து வந்தோம். ரத யாத்திரைக்கு எந்த ஒரு தடையும் வரக்கூடாது என்று கேட்டிருந்தோம். தடை வந்த காரணத்தால் ஆதரவைத் திரும்பப் பெற்றோம். அப்போது பார்லிமெண்டுக்கு ராஜீவ் காந்தி ஒரு நோட் அனுப்பியிருந்தார். சந்திரசேகர் பிரதமராவதற்கு நாங்கள் நிபந்தனை அற்ற ஆதரவு தருகிறோம் என்று. உடனே ராஜீவ் காந்தியை போனில் அழைத்தார்கள். பிரதமரை முன்மொழிய எதிர்கட்சித் தலைவரால் மட்டுமே முடியும். காங்கிரசு தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே நீங்கள் முன்மொழிய முடியாது என்று விளக்கினார்கள். பிறகு நாங்களும் சந்திர சேகரை ஆதரித்தோம். எதிர்கட்சித்தலைவர் அத்வானி என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்று நிகழ்வுகள் நடந்தன.

அடுத்தநாள் ராஜீவ் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலில் நான் எதிர்கட்சித்தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு ஒரு யோசனை சொன்னார். நீங்கள் வெகு தொலைவில் இருக்கிறீர்கள். நீங்கள் காலி செய்து 10 ஜன்பத்துக்கு வந்திடுங்கள். நான் வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன். எப்பொழுதும் 7 ரேஸ் கோர்ஸ் பிரதமர் இல்லமாகவும் 10 ஜன்பத் எதிர்கட்சித் தலைவர் வீடாகவும் இருக்கட்டும் என்றார். தங்கள் யோசனைக்கு நன்றி. நான் இந்த வீட்டில் நெடுங்காலமாக வசித்து வருகிறேன். மாற்ற அவசியமில்லை என்று மறுத்து விட்டேன். பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு வீடு மாறவேண்டி இருந்தது.

மாநில சுயாட்சி
நரேந்திர மோடியின் ஆட்சியை குஜராத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். அது போல பாஜக ஆளும் மாநிலங்களிலிலும் அதன் ஆதரவில் இயங்கும் ஆட்சிகளிலும் தரமான நிர்வாகத்தைத் தர முயற்சி செய்கிறோம். நம் அமைப்பின் படி வலுவான மாநில அரசு மற்றும் அதற்கு ஆதரவு அளுக்கும் மத்திய அரசு என்கிற Federal system இருக்கவேண்டும். ஆனால் காங்கிரஸ் அரசு திரும்ப மன்னராட்சியைக் கொண்டு வந்து மத்தியை வலுவானதாகவும் மாநில அரசை வீக் ஆக்கும் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்வராஜ்ஜியதிலிருந்தி சுராஜ் (நல்ல ஆட்சி) ஆட்சிக்கு மாறவேண்டும். ஆனால் நாம் மீண்டும் மீண்டும் பின்னோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம்.

ஊழல் அரசு
தற்போது நடக்கும் ஆட்சியில் பல பிரச்சினைகள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு இவ்வளவு பெரிய ஊழல்கள் எந்த ஒரு அரசிலும் நடக்கவில்லை. 2ஜியாக இருக்கட்டும். காமன் வெல்த் ஆக இருக்கட்டும். குற்றவாளிகளைக் காப்பதிலேயே குறியாக உள்ளது இந்த அரசு. பிரதமர் மன்மோகன் ஏதும் சொல்வதில்லை.

உள் ஒதுக்கீடு
முஸ்லீம்களை காங்கிரசை விட யாராலும் அப்பட்டமாக ஏமாற்ற இயலாது. உள் ஒதுக்கீட்டுச் சிக்கலில் எவ்வாறு பட்டுக்கொண்டு விழிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். இது அடுத்து வர இருக்கிற மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே இந்தப் பிரச்சினை எழுப்பப்படுகிறது.

அத்வானி ஆங்கிலத்தில் பேசிய போது சிலர் கிளம்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. ஆனால் பெரும்பாலான கூட்டம் கலையாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டும் கைகளைத் தட்டியும் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

எவ்வளவு பெரிய மனதுடன் பேசினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று மோடியைப் பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசினார் சோ.  பிறகு மைக்கைப் பிடித்தார் மோடி.

வணக்கம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று டிபிகல் வடமாநில தலைவராய் தொடங்கியவர் எழுதி வைத்த அறிக்கையைப் படிக்க ஆரம்பித்தார். ஆரம்பமே GDP, economy என்று பேசியதால் சிலர் மண்டை காய்ந்து எழத் தொடங்கினார்கள். நல்ல வேளை எனக்கு கால் நீட்ட இடம் கிடைத்தது.

தமிழ்நாடு
பல விதங்களில் குஜராத்தும் தமிழ்நாடும் ஒன்று பட்டிருக்கின்றன. எனக்கும் உங்களுக்கும் பில்டர் காபி மிகவும் பிடிக்கும். அதனைத் தயார் செய்யப் பயன்படும் சிக்கரி குஜராத்திலிருந்து வருகிறது. தமிழ் பெண்களுக்கு காட்டன் சேலை மிகவும் பிடிக்கும் இந்தியாவின் அதிகமான பருத்தி விளையும் மாநிலமாக குஜராத் திகழ்கிறது. அதை விட பெரிய ஒற்றுமை. இரண்டுமே காங் அல்லாத முதல்வர்களால் ஆளப்படுகின்றன.

19gujarat2.jpg

காங்கிரஸ் அரசின் பிரச்சினை
ஒரு காலத்தில் சீனாவின் பொருளாதார மதிப்பைவிட இந்தியாவின் பொருளாதார மதிப்பு உயர்ந்திருந்தது. இப்பொழுது நிலை என்ன. இந்தியாவின் பொருளாதார மதிப்பை விட சீனா 3 மடங்கு பெரியது. காரணம் என்ன. எகானமி take off ஆகவில்லை. அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இன்னமும் பட்டினி சாவுகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவினை சரி செய்ய முடியவில்லை. இவற்றை வைத்துக்கொண்டு எப்படி வல்லரசாக முடியும். நமது முயற்சிகள் ஒருங்கிணைத்து இரு இலக்க வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் இந்த அரசால் அதைச் செய்ய முடியவில்லை. தற்போது இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். இது ஒரு சேதமான ஆரம்பம். இப்பொழுதாவது நாம் விழித்துக்கொண்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும். இல்லை என்றால் மிகவும் பின்தங்கிவிடுவோம்.

தேசப் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. தீவிரவாதம் மற்றும் நக்சலிசம் அதிகமடைந்து வருகிறது. பார்டரில் பாகிஸ்தான் உள்ள காரணத்தால் அதிக ஆபத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்குத் தகுந்த தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது மத்திய அரசு.

காங்கிரசும் முஸ்லீமும்
ஸ்வராஜ்ஜியத்திலிருந்து சுராஜ்ஜியத்திற்கு மாறவேண்டும் என்று அத்வானி கூறினார். ஆனால் திரும்ப மன்னராட்சியை ஏற்படுத்தி வருகிறது காங்கிரஸ். அது ஓட்டு வங்கி அரசியலைப் பயன்படுத்தி தேசத்தை அழித்துக் கொண்டு உள்ளது. முஸ்லிம்களுக்கு அவர்களை விட யாராலும் துரோகம் இழைக்க இயலாது. ஆனால் எதிர்வரும் 5 மாநில தேர்தல்களை மனதில் கொண்டு அவர்களின் ஓட்டு வங்கிக்காக இப்பொழுது உள் ஒதுக்கீடு என்னும் நாடகத்தை நடத்துகிறது.

தனிநபர் அரசியல்
எல்லாவற்றையும் விட புதிதாக ஒரு அரசியல் பாணி காங்கிரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் தனி நபர் அரசியல். தனக்குப் பிடிக்காத நபர்களை எப்பாடு பட்டாவது தொல்லைகளைக் கொடுத்து அகற்ற முயற்சிப்பது. துரதிருஷ்ட வசமாக நான் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எப்பாடு பட்டாவது என்மீது குற்றம் கூற சிபிஐயைப் பயன்படுத்துகிறார்கள். சிபிஐ மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எனக்கு இல்லை. அதை வைத்து காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை மிரட்டி வருகிறார்கள்.

இவற்றை விடுத்து நாட்டை முன்னேற்ற முயற்சிகள் எடுக்கவேண்டும்.  என்னுடைய குஜராத் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். நம்மால் முடியும்.

குஜராத்
dilip_656946f.jpg
தேசத்தின் வருட விவசாய வளர்ச்சி 3 சதம். குஜராத்தில் மட்டும் 11 சதம். உங்கள் மாநிலத்தில் மனிதர்களுக்கு காட்டராக்ட் சிகிச்சை செய்து கேள்விப் பட்டிருப்பீர்கள். குஜராத்தில் கால் நடைகளுக்கு நாங்கள் செய்கிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியில் 60 சதம் உயர்ந்திருக்கிறோம். உங்களுக்கு அமுல் தெரியாமல் இருக்க முடியாது. இதை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டில் மனிதர்களுககு ஒரு health card கிடையாது. ஆனால் எங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயியிடமும் soil card இருக்கிறது. என்ன மாதிரியான நிலம். நிலத்தில் வளம் எவ்வளவு. எந்த நிலத்திற்கு எவ்வளவு பூச்சி மருந்து அடிக்கவேண்டும் என்று அணைத்தையும் அட்டவணைப் படுத்தியிருக்கிறோம். விவசாயிகளுக்கு என்ன தேவை. அவர்களுக்கு என்ன கருவிகள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து அவற்றை முடிந்த அளவிற்குப் பெறுக்கி இருக்கிறோம்.

தொழில் முனைவோர் நம்பிக்கை
நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல கட்டமைப்பு வசதிகள் தேவை. தரமான சாலைகள். துறைமுகங்கள். விமான நிலையங்கள் ஆகியவை. ஆனால் அவற்றை வளர்க்காமலே வைத்திருக்கிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டு உலகப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெற இயலாது.

தொழில் முனைவோருக்குத் தகுந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். டாடா நானோவிற்கு மேற்கு வங்கத்தில் பிரச்சினை வந்தபோது என்னுடைய அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். இந்தந்த மாநிலம் இன்னன்ன சலுகைகளை வழங்குகின்றனர் என்று. மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ரத்தன் டாடா அறிவித்த அடுத்த நிமிடம் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஸ்வாகதம் (நல்வரவு)

ஊழல்
1313431101_latest_news_15-kani-raja-kalmadi.jpg
அப்படி தொழில் முனைவோரின் நம்பிக்கையைப் பெற்றதாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. ஆனால் அடுத்தடுத்த ஊழல்களால் முதலீட்டார்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். சுதந்திர இந்தியாவில் அதிகமாக ஊழல் புரிந்தது இந்த அரசுதான். 2ஜி ஊழல். காமன்வெல்த் ஊழல் என்று மெகா ஊழல்கள் குற்றச்சாட்டுகள் உள்ளன. பெரிய பெரிய தொகைகளில் ஊழல் செய்கிறார்கள். அந்த டெண்டர்களின் மதிப்பு ஒரு மாநில அரசின் பட்ஜெட் தொகையை விட அதிகம்.

இந்த ஊழல் அரசு அகற்றப்படவேண்டும். அதற்கான ஆதரவை ஜெ தரவேண்டும். தவறுகள் நிகழ்ந்தால் தண்டனை கொடுப்பதில் தமிழ் மக்கள் சிறந்தவர்கள். ஆகவே சோ ராமசாமி போன்றவர்கள் இந்த விசியங்களைப் பற்றி ஆழமாக எழுதி மக்களிடம் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்.

அரசியல் கூட்டங்களுக்குப் போவதில் பெரிய நன்மைகள் ஏதும் வந்துவிடாது. ஆனால் அதில் ஏற்படும் ருசிகரங்களுக்காவே பலரும் போய் வருகிறார்கள். சுதந்திர காலத்தில் வாழ்ந்த அத்வானி போன்றவர்களிடம் ஆவணப்படுத்தவேண்டிய செய்திகள் நிறைய பொதிந்திருக்கின்றன. அவற்றையும் அவர்களிடம் உள்ள செவி வழிச்செய்திகளையும் முழுக்க இல்லாவிட்டாலும் ஓரளவாவது யாராவது ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

முற்றியது.

15-01-2011 தமிழ்பயணி குழுமத்திற்கு எ

ஒரு நண்பரைச் சந்திக்க கும்பகோணம் பயணம் செய்யவேண்டியிருந்தது. திருச்சி – புதுகை சாலை ஒற்றைச் சாலையாக இருந்த போது கூட தஞ்சை – புதுகை மாநிலச் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தது. என்றாலும் பொதுவான தேவைகளுக்கு புதுகை மக்கள் திருச்சியையோ அல்லது மதுரையையோதான் இன்றும் சார்ந்திருக்கிறோம். இதனால் காரண காரியம் இல்லாமல் தஞ்சைத் தரணிக்கு விஜயம் செய்வது மிகக் குறைவு. காரணம் ஒன்று இருக்கிறது என்றவுடன் மனதில் தோன்றியது அழகு கொட்டிக் கிடக்கும் தாராசுரம்.

யுனெஸ்கோவினால் கடந்த காலத்தில் தத்தெடுக்கப்பெற்ற 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேஸ்வரர் கோயில் வார்த்தைகளால் வடிக்க இயலாத பிரம்மிக்கத்தக்க ஒரு இடம். தஞ்சை பெரியகோயில் பிரம்மாண்டமானது என்றால் தாராசுரம் கோயில் பிரம்மிப்பானது. அழகானது. இந்தக் கோயிலைப் பார்த்து மனதைப் பறிகொடுக்காதவர்கள் கிடையவே கிடையாது.

அதை நினைத்து கிளம்பும்போதே மனது பரபரப்பானது. திட்டமிடப்படாத பயணம் என்பதால் காமிராவும் அதன் சகா பாட்டரியும் முழுத்தூக்கத்தில் இருந்தார்கள். அலைபேசியில் இருந்த அரைகுறை காமிராவை சிரமேல் வைத்து பயணத்தைத் தொடங்கினோம்.

அம்மா புண்ணித்தில் பேருந்து கட்டணங்கள் ஏறிய பின் முதல் தஞ்சை பயணம் இல்லவா. எனவே 30 ரூபாய் பணத்தை எடுத்து டிக்கட் எடுக்க நீட்ட..

அண்ணே தஞ்சாவூர் ஒரு டிக்கட் தாங்க
3 ரூபாய் கொடுங்க
சில்லரை இல்லையே
அட டிக்கட் 33 ரூபாய். 30தான் கொடுத்திருக்கீங்க.

அசடு வழிந்து இன்னொரு 3 ரூபாயைக் கொடுத்து தஞ்சை வந்து இறங்கினோம். பின்னர் தஞ்சை – கும்பகோணம். இந்த வழியில் பேருந்தில் பயணம் செய்வதற்கு அதிகப் பொறுமை வேண்டும். சந்து, தெரு, தார்ச்சாலைகளாக மாற்றப்பட்ட அந்தக் காலத்து மாட்டு வண்டிப்பாதை என்று அனைத்திலும் பயணம் செய்தல் வேண்டும்.

செல்லும் வழியில் பெரிய கோயில் தரிசனம்!
தஞ்சை பெரிய கோயில்

தொடர்ந்த பயணம் வாய்க்கால் ஓடும் சிற்றூர்கள், அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாத அரசியலடியவர்களின் கட்வுட் போஸ்டர்கள், காலைநேரப் பனி, ….. மிக அழகானதொரு பயணத்தொடர்ந்து தாராசுரம் வந்து சேர்ந்தோம். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அதன் நுழைவாயில்  போன்று அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.

இங்கு அமைந்திருக்கும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில்தான் நமது இலக்கு.

பெரியகோயில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான அங்கீகரிக்கப்பட்டதும் வெகுவாக முயற்சி செய்து இந்தக் கோயிலையும் யுனெஸ்கோ குடையின் கீழ் வரச் செய்த வரலாற்று மற்றும் தொல்லியல் அறிஞர்களை வணங்கியாகவேண்டும்.

தொல்லியல் துறையின் கீழ் இருந்தாலும் பெருவாரியான அறிஞர் பெருமக்கள் முயற்சி எடுக்கும் முன்னர் தாராசுரத்தின் கைவிடப்பட்ட கோயிலாக மாறிக் கொண்டிருந்தது அந்த ஆலயம். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பெற்று சுற்றி வர பச்சைப் பாட்டாடையென அழகுற அமைக்கப்பெற்ற  பூங்கா என்று கண்ணைக் கொள்ளை அடிக்கிறது இப்போதுள்ள அழகு….. என் கண்ணே பட்டுவிடுமே!

Temple surrounded by Park

அழிந்த நிலையில் பழைய முன் கோபுரம்

பழைய முன்கோபுரம்

ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவத யானைகளால் இழுக்கப்படும் அழகு இந்தக் கோயிலின் சிறப்பு. இதில் உள்ள சக்கரம் தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
ரதம்
யானையின் அலங்காரத்தைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். சிற்பியின் கற்பனையைக் கண்டு வியப்பதா. கற்பனையை நிஜமாக்கிய அவரது திறமையைக் கண்டு வியப்பதா?

குதிரை

ரதம் 2
மண்டபத்தின் தூண்கள் பார்ப்பவரை மலைக்கவைக்கும் அழகுடையவை.

மாடங்கள்
மாடங்களில் உள்ள எழில்மிகு தெய்வ உருவங்கள்

கல் அலங்காரம்
நம்ப ஊர் கல்லில் இத்தணை அலங்காரம் செய்ய முடியுமா என்ன?

சிலைகள்
புராணக் கதைகள் அறிந்து கொண்டு இந்தக் கோயிலுக்குச் சென்றால் அன்று ஆர்வத்திற்கு செம தீனிதான்

தூண்களில் நடன மாதர்கள் தரும் நடன பாவனைகள் செதுக்கப்பட்டுள்ளன.
நடனமாது

சிறிய அளவில் மிக நேர்த்தியாக உள்ள அந்த சிலைகள்தான் நம்மைத் திரும்ப திரும்ப இந்தக் கோயிலுக்கு வரத் தூண்டுகின்றன.
தூண்கள்

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

வீணாதாரர்
வீணாதாரர் – மேலே இருக்கும் நர்த்தன கணபதியைப் பார்க்க மறவாதீர். விரக்கடை உயரமுள்ள இடத்தில் எத்தணை நேர்த்தி?

காளை வாகனர்
காளை வாகனர்

சிவதாண்டவம்
சிவதாண்டவம்

கஜ சம்ஹாரர்
கஜ சம்ஹாரரும் அவரது தீரத்தை பயத்துடன் நோக்கும் பார்வதியும்

கோயில்
கோயிலின் ஒவ்வொரு அடியிலும் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது. புராணக் கதைகள் ஒளிந்துள்ளன.

சிற்ப வரி
சிற்ப வரி மட்டுமல்ல – புராணக் கதைகளின் விளக்கமும் கூட

ஜன்னல்
வித்தியாசமான ஜன்னல் வடிவங்கள்

ஓவியம்
நாயக்கர் காலத்தில் கோயில் முழுக்க வண்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்

அழகு
அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு

சுற்று
இந்த திருச்சுற்றில் கரிகாலனும் இராஜராஜனும் சுற்றி வந்து சிவனை வழிபட்டார்களாம். அந்த ராஜகம்பீரக் காட்சியைப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாதா?

லிங்கோத்பவர்
பின்புற மாடத்தில் லிங்கோத்பவர்

நடனமாதர்
வட்டம்
சிற்பிகளின் சித்து விளையாட்டுக்கள்

பிரசவம்
கிராமத்தில் பிரசவம்

வாலி வதம்
வாலி வதம்

சில்லுட்

கும்பகோணம் பக்கம் சென்றால் அவசியம் சென்று வாருங்கள்.

வீடு விட்டு வேறு இடம் எதையும் விரும்பாத வீட்டுப்புழுக்களில் நானும் ஒருவன். விதி வேறு மாதிரி விளையாடி பணி பணம் என்று தற்சமயம் சென்னையில் ஜாகை கொண்டாலும் சொந்த இடம் தேடிப்போகும் நாளுக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்திருப்பவன். அதில் தவறு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சக நண்பர்களுக்கும் அந்த நினைப்புகள் இருந்தவண்ணம் இருக்கின்றன என்பதே உண்மை.

கொசுவத்தி சுத்துவது இருக்கட்டும். இந்தப் பழமை பதிவு திருவரங்கம் பற்றியது. கொஞ்சம் 18 வருடங்கள் பின்னால் செல்லலாம். பழங்கதைன்னா சுருள் போடனும்ல.

9ஆம் வகுப்பில் அது ஒரு குளிர்கால டிசம்பர் மாதம். பள்ளியின் தேசீய மாணாக்கர் படையில் ஒரு முகாம் வாய்ப்பு வந்தது. அது போன்ற வாய்ப்பினை முன்னர் அதிகம் இழந்திருந்தேன். பெரும்பாலும் சீனியர்கள் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். மாணாக்கர் படையின் இரண்டு ஆண்டு கால முடியும் தருணம் அது. எனவே இந்த வாய்ப்பையும் இழந்தால் பிரிதொரு வாய்ப்பு என்பது அமையப் போவதில்லை. அரையாண்டில் நான்காவது நாள் பரிட்சை நடந்து கொண்டிருந்தது. மாணாக்கர் படையினர் மாலையில் அலுவலகம் வருமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

ஏனைய பள்ளிகளில் மாணாக்கர் படை ஏனோதானோ என்று இருந்தாலும் எங்கள் படை சற்று பொறுப்புடன் இருந்தது என்று சொல்லவேண்டும். நாங்கள் செய்த சாதனைகளில் சில…

அரசுப்பள்ளி மாணவர்கள் தானே. காலணி பூட்சு என்பது நாங்கள் அணிவதே இல்லை. விளையாட்டில் அக்கரையாய் மெனக்கெடும் மாணவர்கள் தவிற யாரும் ஷூவை சீந்தியதாக நினைவில்லை. அப்படி இருக்க எங்கள் காலுக்குப் பொறுந்தாத ஷூ, முட்டிக்கால் வரை தொங்கும் சாயம் போன சீருடை என்று மாணாக்கர் படையின் காமெடிகள் நிறைய. இரண்டாம் வருடம் கிடைத்த டிசி துணிகளைப் பெற ஒரு போட்டா போட்டியே நடந்தது.

அந்த ஷூவைப் பற்றி ஒரு தனிப் பதிவே போடலாம். அதன் பராக்கிரமங்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் மட்டும் இங்கே.
என்னை ஒத்த மாணவர்களின் கால் அளவு என்னவோ 6. தரப்படும் ஷூவின் அளவோ 8 அல்லது 9.. என்ன செய்வது? நுனிப் பகுதியில் கொஞ்சம் துணி வைத்து அடைத்துப் போட்டால்தான் கால் அதன் உள்ளே நிற்கும். எனக்குக் கொடுத்த ஷூவிற்குள் என் அப்பாவின் பனியனையே உள்ளே நுழைக்கலாம். அவ்வளோ பெரிசு!

அதையும் லெப்ட் ரைட் மாற்றிப் போட்டு விட்டு பப்ளிக்கா நடந்து போகையில் ‘டேய் தம்பிகளா. ஷூ தப்பா போட்ருக்கியடா’ என்று தெருவில் சொல்பவர்கள் உண்டு!

எதற்கும் கலங்காமல் தெருவோர பைப்படியில் மாற்றிவிட்டு (பேலன்சுக்கு பிடிச்சிக்க ஏதாவது வேணும்ல!) பொது ஊர்வலம், தீபாவளி பந்தோபஸ்து, மாணாக்கர் படை மேலதிகாரிகள் வரும்போது பேரேடு என்று அனைத்திலும் கலங்கடிக்கும் மார்ச் பாஸ்ட் போடுவதில் எங்களுக்கு இணை யாரும் இருக்க முடியாது. முட்டுக்குடுத்த துணி பத்தாமல் லெப்ட் ரைட் போடும்போது சில பையன்களின் ஷூ காற்றில் பறக்கும் என்றாலும் அவன் போட்டுக்கொண்டு வரும்வரை அந்த இடத்தை வெற்றிடமாகவே வைத்திருக்கும் ஒரு டீஜண்டான பசங்க நாங்க!

அத்தோடு முன்னால் நடப்பவனின் கால்களை மிதிப்பது, “டேய் சவட்டைக் காலு” என்று வெறுப்பேத்தி சேவை சாதிப்பது (அலுவலர் கவனிக்காத நேரத்தில்தான். அந்த ஆளு கண்ணில பட்டா அப்புறம் கிரவுண்ட சுத்தச் சொல்லுவாரு)

என்ன இருந்தாலும் மாணாக்கர் படைக்குக் கிடைக்கிற மவுசும் பந்தோபஸ்தும் தனிதான். அதற்காகவே எந்த ஒரு பேரேடுக்கும் தவறாமல் செல்வதுண்டு.

அப்படி இருப்பின் எங்களால் செயற்கரிய காரியங்களும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்தது.

புதுகை வெள்ளாற்றங்கரையோரம் இருந்த ஒரு துப்பாக்கி சுடும் தளம்தான் பிரதான பயிற்சி இடம். நாங்கள் படையில் சேர்ந்த அதிர்ச்சியோ என்னவோ. அந்த தளம் இடிந்து விழ, துப்பாக்கி பயிற்சி என்பதே முதல் வருடத்தில் எங்களுக்குக் கானல் நீராயிற்று! விடுவதாய் இல்லை என்று மாணாக்கர் படை அலுவலர் எங்களுடன் சேர புதிய துப்பாக்கி சுடும் தளத்தை பள்ளிக்கு சற்று தொலைவில் காடுகள் நிறைந்த பிரதேசத்தில் அமைத்தோம். அது ஒரு நல்ல அனுபவம். 8 மற்றும் 9ஆம் நிலையில் இருந்த சிறார்கள் ஈர செம்மண் மூட்டைகளைத் தூக்கி வந்து ஒரு மண்மேடு அமைத்த நாள் அது. பக்கத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அப்பொழுது கட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன். கான் பறித்த மணல் இவ்விடம் துப்பாக்கி சுடும் மேடு ஆயிற்று. இவனுகளே firing range செஞ்சுட்டானுக என்று எங்கள் அலுவலர் பெறுமை பொங்க சொல்லிக்கொண்டு இருந்தார்

அத்தி பூத்தாற்போல வரும் வெளியூர் முகாம்களிலும் சக மாணவர்கள் திறமைகளைக் காட்டி பட்டாசு கிளப்பினார்கள். பொதுவாக நாங்க கொஞ்சம் சரியாவே சுடுவோம்.

ஒரு இனிய அதிகாலையில் புதிய தளத்தில் அதிகாரிகள் புடை சூழ “புதுத் தளப் புகுவிழா”வானது முதல் துப்பாக்கிப் பயிற்சியுடன் தொங்கியது. துப்பாக்கி குண்டுகளை மேலதிகாரிகளிடம் இருந்து பெற்று அதற்கென்று உள்ள சரணங்களை எல்லாம் பாடி முடித்து ‘கன் கிளியர் சார்’2 சிக்னல் கொடுத்தால் சோலி முடிந்தது. வந்தது வந்திட்டாங்க. நீங்களும் சுட்டுப் பழகுங்க என்று எங்கள் பள்ளி வாத்தியார்களும் சிலர் சுடுவதற்கு வாய்ப்பு பெற்றார்கள். புலிகேசி கரடிக்கு அம்புவிட்டது போல் அது ஒரு காமெடிப் பட்டாசு. ஒவ்வொரு குண்டும் ஊய்ய்ய் என்று கத்திக்கொண்டு வானத்தில் பறந்ததே தவிற ஒன்றும் இலக்கைத் தாக்கியதாக தெரியலை. நம்மைக் கலங்கடிக்கும் வாத்தியார் நம் முன்னிலேயே கலங்கினால் பசங்க மனசும் ஊய்ய்ய் என்று விசிலடிக்கத்தானே செய்யும்?

என்னசார் இப்டி சுடுறீங்க. முன்ன ஒரு U இருக்கும் சார். பின்னாடி ஒரு I இருக்கும் சார். ரெண்டையும் சேத்தா ஒரு நாமம் வரும். அந்த நாமத்தை வெச்சு சுடவேண்டியதுதான் சார் (உபயம் – முந்திய நாள் நடந்த பயிற்சி வகுப்பு) வாத்தியாருக்கு ஒப்பித்து, அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாக்களாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதற்கும் நாங்கள் தயங்கவில்லை!

இப்படியாகிய சூழலில் அடுத்த முகாம் அறிவிப்பு வந்தது.
இடம் திருவரங்கம்
நாள் 30 (என்று நினைக்கிறேன்)

பையன்கள் படிப்புக் காலம் அத்துடன் பொங்கல் விழாவும் கட் ஆகும் என்பதால் அலுவலர் சற்று எச்சரிக்கையுடனே மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். தேர்வுதானே அது போனால் போகிறது. அத்துடன் தேர்வை எழுதாதிருக்க டியூசனைக் கட் அடிக்க இது அல்லாது பெரிய காரணம் வேண்டுமா என்ன? சில மாணவர்கள் வீடுகளில் திட்டுவார்கள் என்று பயந்தார்கள். எனவே இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொண்டு, மாலையே வீட்டில் வந்து காரணம் தெரிவித்து (இது போன்ற காரணங்களுக்கு வீட்டில் மறுக்கமாட்டார்கள் என்று நமக்கும் தெரியுமே!) அடுத்த நாள் 11 மணிக்கு புதுகை பேருந்து நிலையத்தில் அனைவரும் ஆஜர்.

பையன்களைக் கூட்டி வந்த பெற்றோருக்கு செம டோஸ். விட்டது யாரு. நம்ப பயிற்சி அலுவலர் பருத்திவீரன்தான்!

இந்த ட்ரெயினிங் அனுப்பறதே தனியா பசங்க அவனுகள மேனேஜ் பண்ணிக்கனும்னுதான். என்னவோ இதுக்கும் கூடவே வந்திட்டு இருந்தா அவன் எப்பிடிதான் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்குவான் என்று ரோட்டில் வைத்து அவர் சர வெடி வெடிக்க.. பெற்றொர்கள் அசடு வழிந்து கொண்டு வெளியேறினார்கள். கடைசியில் யாதொரு பெற்றொரும் பேருந்து நிலையத்தினுள் வரவில்லை.

புதுக்கோட்டை டு திருச்சி; திருச்சி டு திருவரங்கம் என்று எங்கள் புண்ணிய யாத்திரை ஆரம்பமாயிற்று. திருவரங்கம் பேருந்து திடீரென ராணுவத்தினரால் வழி மறிக்கப்பட என்னவோ ஏதோஎன்று அனைவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க.. நாங்களும் அவ்வண்ணமே பிராக் பார்க்க.. இந்தியில் ஏதோ கமாண்டு வந்தது. கடைசியில் ‘பாய்ஸ் கெட் டவுன் ‘ என்று எங்கள் அலுவலர் உத்தரவிட..அடப்பாவிகளா.. எங்களுக்குத்தானா…. என்றவாறே இறங்க முகாம் போபியா பிடிக்க ஆரம்பித்தது.

அவ்வழி வரும் நகரப் பேருந்துகளில் சீருடை அணிந்து யாராவது வந்தால் வழிமறித்து இறக்குவதில் ராணுவத்தினர் குறியாய் இருந்தனர். அவர்கள் பின்னால் தொடர்ந்த போதும் சரி, அவர்கள் எங்களுக்கென தனித்துத் தந்த வகுப்பறைகளில் நுழையும்போதும் சரி…. “இந்த ஆளு அந்த ஆடு.. இந்த கொடை.. அந்த அருவா.. ரெண்டுக்கும் சம்மந்தம் இருக்கமாதிரியே இருக்கு இல்லே ” என்ற எண்ணமே எங்களுக்கு.

கொள்ளிடக்கரையில் உள்ள திருவரங்கம் ஆண்கள் மேநிலைப்பள்ளிதான் எங்கள் ஜாகை

மதியமே கெடுபிடிகள் தொடங்கியது. பதுவிசாவே ஒரு அதிகாரிக்கும் பேசத்தெரியலை. எதுக்கெடுத்தாலும் ஒரு அதட்டல். ஒரு கேர்ர்ரராவே சுத்திட்டு இருந்தோம். “இனி டரியல் தொடரும்”னு ஒரு ஆப்பீசர் குச்சியும் கையுமாவே சுத்திட்டுத் திரிவார். ஆடுகள் மந்தையை விட்டு அடச்சே.. நாங்கள் வரிசையை விட்டு எங்காவது நகர்ந்தால் பிருஷ்டம் பிய்யும் வரை அடிக்கும் அந்த சிங்குமாமாவை இப்ப நினைத்தாலும் மனதிற்குள் திட்டுவதில் தவறேதும் இல்லைதானே!

மார்கழி மாச குளிர். அதுலையும் காலையில 5 மணிக்கி விசில். ஒரு மணிநேரத்தில் ‘எல்லாம்’ முடிச்சிட்டு 6 மணிக்கி பல்லவன் கிளம்பற நேரத்தில கவாத்துப் பயிற்சி. 8 மணிக்கி சாப்பாடு. 9 மணிக்கி திரும்ப கவாத்து. 2 மணிக்கி சாப்பாடு. 3 மணிக்கு ஊர்வலமாகப் போய் கொள்ளிடத்தில் குளியல் (கெடுபிடிகளுக்கு நடுவில் எங்களுக்கு இருந்த பாலைவனச் சோலை அது) பிறகு 6 மணிக்கி பொழுது போக்கு (ஆடல் பாடல்) 8 மணிக்கி இரவுச்சாப்பாடு என்று முகாம் முழுக்க ‘திகார் ராசா’ கெட்டப்பிலேயே நாங்கள் திரிந்தோம் என்றாலும் ஓரிரு நாட்களில் சூழல் பழகிவிட்டது.

டேய் அவிங்களுக்கு மாத்திரம் சப்பாத்தி ரொட்டியா போட்டு நமக்கு வெந்ததும் வேகாமையும் போடுறாய்ங்கடா…. (ஆப்பீசர் மெஸ்சை எட்டிப்பார்த்தவனின் குமுறல்)

அவனுக்கு ஒரு நாள் இருக்குடீ.. எங்க எரியாவிற்கு வந்து எங்களையே அடிச்சிட்டான் (பக்கத்தில் இருந்த பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து சிங்ஜியிடம் அடிபட்டு, கிரவுண்டில் முட்டி போட்ட திருவரங்கத்தானின் கருவல்)

என்சாய் பன்னுங்கடே (ஒரு வாரமாக விளக்கில்லாத சிறை மாதிரியான வகுப்பறையில் தங்கி விளக்கு வந்ததும் ஆட்டம் போட்ட எங்களைப் பார்த்து கோவம் கொண்டு அடி பின்ன ஓடி வந்து பின் மனசு மாறிய ‘அன்பே சிவம்’ நெல்லை ராணுவத்தானின் நெகிழல்)

டேய் அவிங்க சீரெட்டு பிடிக்கிறாய்ங்கடாஆஆ.. (எங்களுடன் தங்கியிருந்த மதுரை நாகமலை மாணவர்களின் புகையைப் பார்த்து வாய் பிழந்த எங்கள் சேக்காளியின் வியப்பு)

நல்லா பாடினடேய் (பொங்கலுக்கு ரிலீசாகும் தேவர் மகன் ‘போற்றிப் பாடடி’ பாட்டை ரிலீசுக்கு முன்னாடியே தாள வித்வானுடன் பாடியதில் உற்சாகப்படுத்திய இன்னொரு டமீல் மிலிட்டரி)

அய் பொங்கலு (பொங்கல் விழா முகாமால் எங்களுக்கு இல்லாமல் போனதால் ராணுவத்தார் மனமிறங்கி பொங்கல் போட்டார்கள். அதன் வியப்பு ஆச்சரியக்குறி)

ஸ்ஸ்ஸ்… கொதிக்கிதுடா..
அட சும்மா சாப்டுடா. ஸ்டேஷன்ல ஐஸ்வாட்டர் குடிக்கலாம் (அதிகாலை 4 மணிக்கு சிங்ஜிக்கு டிமிக்கி கொடுத்து காம்பவுண்டு சுவர் ஓட்டை வழியாக வெளியேறி பள்ளி வாசலில் குழாப் புட்டுக்கும் திருவரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ஐஸ்வாட்டருக்கும் வாடிக்கையாய் போன எங்களது வழக்கமான டைலாக்)

என்று அந்த மார்கழி முகாம் மார்கழி கலர் கோலம் மாதிரி பட்டையைக் கிளப்பியது.

என்றபோதும் மனதை விட்டு நீங்காத சில விசியங்கள் நடந்தன.

“யாருக்குடா கராத்தே தெரியும்?”. திருவரங்கத்தான் ஒருத்தன் கைதூக்க.. வேறு யாரும் இல்லையா.. என்று அந்த திருவரங்கத்து ஆப்பீசர் எங்களை கேவலமாகப் பார்க்க.. நல்ல வேளை எங்கள் செட்டிலும் இருந்த ஒருவனை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் நாங்கள் தூக்கிவிட்டோம். ஆமா போன இடத்தில இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாதில்ல.

கோழிச்சண்டை பார்க்க ஆர்வமாகும் கிராமத்து பெரிய தலைமாதிரி அலுவலர் அமர, இருவருக்கும் யுத்தம் தொடங்கியது. அவன் அடிக்கவும் இவன் தற்காத்துக் கொள்ளவும் பார்த்த ஆசிரியர்.. புதுக்கோட்டைப் பய பயப்புடுறான் என்று தீர்ப்பளிக்க ஏகக்கடுப்பு. திருவரங்கத்து செட்டைப் பார்த்தாலே ஏகத்துக்கும் கடுப்பாகி புகைய.. ஆனால் முகாமின் இறுதியில் சண்டை போட்ட இருஊர் பையன்களையும் கராத்தே சேர்த்து வைக்க அதன் மூலமாக இரு செட்டும் பகையை விரைவிலேயே மறந்தது. முகாமின் இறுதியில் அந்த திருவரங்கத்து நண்பன்தான் ஊரைச் சுற்றிக் காண்பித்தான். அந்த அளவிற்கு நட்பு துளிர்விட்டிருந்தது.

இவை தவிற ஊரைக் கடந்த நட்புகள், தண்டாயுதபாணி சிங்ஜி என்று நினைவை விட்டு நீங்காத பயணம் அது. இப்பவும் பல்லவனில் வந்தால் பாடி ஆடிய மேடையும் வியர்வை வழிய வீரு நடை நடந்த பள்ளி மைதானமும் என் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதாகவே படுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னான்னா..
மாணாக்கர் படை தீரமும் (!), அதன் மீதான அரசினர் பயிற்சியும் எந்த ஒரு மாணவரும் தவற விடக்கூடாதது. ம்ம்ம். ஆங்கிலப்பள்ளிகளில் எங்குபோய் தேட!

சில பல பதிவுகளைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. அரசியல் ரீதியான பதிவு என்றால் சாக்கடை மாதிரி மூக்கைப் பொத்திக்கொண்டு போக வைத்து விடுகிறார்கள் நம் வலைப் பதிவர்கள். ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ விமர்சனங்களோ எழுதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவ்விடமும் வெற்றி நமதே, குற்றி நமதே என்று அலம்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது பதிவுலக ஆர்வத்திற்கு வைக்கப்படும் தீ! யாரோ ஒரு அரசியல் கட்சிக்கு பதிவுலகில் வந்து பிரச்சாரம் செய்யும் இந்த அறிவாளிகளின் நோக்கம் என்ன? இந்தத் தேர்தல் முடியும் வரை இந்த ஆட்கள் என்னவெல்லாம் எழுதி தமிழ் இணைய உலகிற்கு கிலியை உண்டு பண்ணப் போகிறார்களோ தெரியலை. நினைத்தால் குளிர் காய்ச்சல் கண்டுவிடும் போல் தெரிகிறது!

ஏற்கனவே பத்திரிகைகளை எடுத்தால் சினிமா அல்லது அரசியல் என்பதைத் தவிற என்னவோ சிந்திக்க எதுவுமே இல்லாதது போல தெரிகிறது. அது தவிற யார் பக்கமும் சாயாத பத்திரிக்கைகளைக் காணுவதே அபூர்வமாக இருக்கிறது. தொலைக்காட்சி… உவ்வே..  நிலைமை அவ்வாறு இருக்கையில் சற்று ஆறுதல் அளிப்பதாகத் தோன்றியது தமிழிணைய பதிவுலகம்.

ஆரம்ப காலத்தில் பதிவெழுதுங்கோ பதிவெழுதுங்கோ என்று கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தோம்…. இப்பத் தோன்றுகிறது.. பதிவெழுதாதீர் அய்யா என்று கெஞ்சலாமா என்று! தலையெழுத்து!

http://newfort.blogspot.com என்கிற வலைப்பதிவினை புதுக்கோட்டை தொடர்பான செய்திகளைத் தொகுக்க சில வருடங்களுக்குப் பயன்படுத்தி வந்த நான் அதை கைவிட்டு விட்டாலும் எனக்கும் அந்த வலைப்பதிவிற்குமான தொடர்பினை தமிழ்மணத்தில் நீக்குவது எப்படி என்று தெரியவில்லை. அதன் காரணமாக தற்போது மறைமுக விபரம் (hidden profile) கொண்ட ஒரு நண்பரால் வெளியிடப்படும் செய்திகளும் தமிழ்மணத்தில் என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது. அதனை நீக்க தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டுள்ளேன்.

வணக்கம்.

Posted by: Pandian | October 15, 2010

பை பை லிபர்டி

நேற்று எதேச்சையாக லிபர்டி திரையரங்கம் உள்ள சாலையில் நடந்து சென்றபொது, அவ்விடம் கீற்றுக்கொட்டகை கொண்டு மூடப்பட்டிருப்பதையும், வாசல் கதவுகள் பெயர்ந்திருப்பதைப் பார்த்ததும், சற்றே துணுக்குற்றவனாய் உள்ளே நோக்குகையில் திரையரங்கம் மூடப்பட்டது தெரிய வந்தது. அதன் சேர்கள் அனைத்தும் வெளியே கடாசப்பட்டிருந்தன.  அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர்களும் வருத்தப்பட்டவாறு திரையரங்கம் மூடப்பட்டதைச் சொன்னார்கள்.

கோடம்பாக்கத்தில் பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்த போது, அடுத்த வீதியில்  அமைந்திருந்த இத்திரையரங்கம் அவ்வப்போது எங்களுக்கு பொழுது போக்கு மையமாக உதவியிருக்கிறது. சும்மா வாங்க ஒரு டீ சாப்பிட்டு வரலாம் அப்டிங்கிற மாதிரி வாங்க ஒரு படம் பாத்திட்டு வந்திடலாம்னு கிளம்புவோம். 20 ரூபாய்க்கு பால்கனி டிக்கட்! ஹாயாக கதவைத் திறந்து வைத்துக்கொண்டு படம் பார்க்கவும், போரடித்தால் எழுந்து காரிடார் வந்து கதையளக்கவும் …. எங்களது பேச்சிலர் வாழ்வின் இனிய தருணங்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாற்றப்படும் திரைப்படங்கள் – பெரும்பாலும் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திரைப்படங்களை வெளியிடுவதோடு பகல் காட்சிகளில் பழைய படங்கள் வெளியிடுவார்கள்.

சென்னையில் பழைய திரையரங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்தது இன்று அதன் சேவையை முடித்துக்கொண்டுவிட்டது. மல்ட்டி பிளக்ஸ்களின் வருகைகள் இதற்கு காரணம் என்று ஒரு புறம் சொன்னாலும், இத்தகு தியேட்டர்கள் அடித்தட்டு மட்டும் நடுத்தர வகுப்பு மக்களுக்கே உபயோகமாக இருந்து வந்தன. தற்போது பொழுதுபோக்குக்கான தேவைகள் இல்லாமலில்லை. ஆனால் தொலைக்காட்சி வசம் வந்துவிடுகிறார்கள். காலை பரபரப்பு கிளம்புவது – பணி செய்வது – மாலை டிவி பார்ப்பது என்பது நம் ஜனநாயகக் கடமை அல்லவா. பொழுது போக்கு என்பது மனதை உற்சாகப் படுத்த.. ஆனால் தொலைக்காட்சி பார்த்தால் மண்டை கிறுகிறுக்கிறது. ‘ரெஸ்டு எடுத்து ரெஸ்டு எடுத்து டயர்டா ஆயிட்டியா’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் விசாரிப்பார்.. அந்த நிலை ஆகிவிடுகிறது. ஓவர் டோஸ்! என்றாலும் பலரும் அவர்கள் மனதை தொலைக்காட்சிக்கு கொள்ளை கொடுத்துவிட்டார்கள். பின்னே இவர்கள் எங்கே போவார்கள்.

பேச்சிலர் காலத்தில் இத்திரையரங்கு போவது மகிழ்வாக இருந்தது. திருமணம் முடித்து சில மல்டிப்ளக்சுகள் போனால் .. நூற்றுக்கணக்கில்  பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் குழந்தைகள் என்று கூட்டிப் போனால் சில ஆயிரங்கள் வந்துவிடும் செலவும் இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.

ம்ம்ம்ம்.. அதே லிபர்டி பெயரில் வணிக வளாகம் அமையப் போவதாகச் சொல்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.

லிபர்டி பை பை!

Posted by: Pandian | July 31, 2010

My Android migration – Thanks to Windows!

இந்த வருடத்தின் எரிச்சல் மிகுந்த வாரங்களில் ஒன்றாக கடந்த வாரத்தைக் கருதலாம். என் விண்டோஸ் கைபேசியின் பிரச்சினைகள் கட்டுக்கடங்காது போனது. சமீபத்தில் வாங்கியதுதான். அதுவும் பல விமர்சனங்கள், நுட்ப குப்பைகள் அனைத்தையும் பார்த்து சீப் அண்டு பெஸ்டு என்று எனக்குத் தோன்றியதை வாங்கிப் போட்டேன். வாங்கிய பின் அப்ளிகேஷன்களை நிறுவ ஆரம்பித்த போதுதான் தகறாரு தொடங்கியது.

அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. விண்டோசு தரும் இலவச அப்ளிகேஷன்களில் வழக்கம்போல கட்டுப்பாடுகள். இருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களும் திருப்திகரமாக அமையவில்லை.

அடுத்த கட்டமாக சில அப்ளிகேஷன்களை நிறுவுகையில் அனுமதி (permission) கோளாறுகள் வந்தன. என்னடா வம்பா போச்சு என்று கூகுளாண்டவரைத் தேடினால் ரிஜிஸ்ட்ரியில் மாற்றவேண்டும். அதற்கு regedit  மாதிரியான ஒரு அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம் என்றார்கள். விடிவுகாலம் என்று எண்ணி அதனையும் இறக்கி நிறுவுகையில் அதை நிறுவுவதற்கும் அனுமதி பிரச்சினை வந்தது. அட ஆண்டவா!

சரி போகட்டும் என்று இருக்கிற அப்ளிகேஷன்களை வைத்து ஓட்டலாம் என்றால் வந்தது ஆமை பிரச்சினை. கைபேசி ஆமை வேகத்தில் இயங்கத் தொடங்கியது. இறக்கப் போகும் நோயாளியில் நாடி அடங்குவதைப் போல நாளுக்கு நாள் வேகம் குறைந்தே வந்தது.

என் பயன்பாட்டில் அடுத்த நிலைக்குப் போகாவிட்டாலும் பிரச்சினையின் அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டிய கட்டாயம் வந்தது. மடல் செயலிகள், IM செயலிகள் ஓடவிட்டுட்டா அடுத்த அரை மணி நேரத்தில் தொங்கியது (hang!). வேறு வழியின்றி குளறுபடிகளைக் களைய கட்டாய மராமத்து பணி செய்ய வேண்டிய தேவை வந்தது.

ஆரம்பத்தில் நன்றாகப் பலன் தந்த அந்த மருத்துவம் கடந்த வாரத்தில் பொய்க்கத்தொடங்கியது. Hard reset செய்த அடுத்த ஒரு நிமிடத்திற்குள் கர்ஸர் பொத்தான்கள் இயங்காது. அடுத்தடுத்த தாக்குதலின் கட்டமாக தொங்கிவிடும். 24 மணிநேரத்தில் 24 முறை செத்துப் பிழைத்தது கைபேசி.

சேவை மையம் பிரச்சினைகளைக் கேட்டார்கள். சாம்சங் சேவை மையம் என்னைப் பொறுத்தவரை நாளானாலும் பழுது நீக்கித் தந்துவிடுகிறார்கள். இந்த முறை அவர்களது பதில் என்னை ஏமாற்றம் அடைய வைத்தது. இந்த தொங்கல் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். ஆனால் வேகம், செயலி நிறுவல் அதில் ஏதும் கை வைக்க இயலாது. நான் அந்த சோம்பேறியுடன் குடும்பம் நடத்தவேண்டும் என்றார்கள். கண்ணைக் கட்டுதே சாமி!

ஒரு வழியாக வார இறுதியில் கிடைத்த விலைக்கு அந்த சோம்பேறிக்கு மறுமணம் செய்துவைத்துவிட்டு, கிராமத்து தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆண்ட்ராய்டுக்கு மாறலாம் என்று ஒரு மனதாக முடிவிற்கு வந்து 3 மாதிரிகளை முடிவு செய்து இறுதியில் ஒன்றினை வாங்கி வந்தேன்.

பயன்படுத்தத் தொடங்கிய 1 மணி நேரத்தில் வித்தியாசம் தோன்றியது. இடைமுகம் (interface) பட்டாசு கிளப்பியது. துவங்கவோ அடங்கவோ எடுத்துக் கொள்ளும் நேரமோ மிகக் குறைவு. உதாரணமாக ஜிமெயிலோ, பேஸ்புக்கோ.. விண்டோஸில் பயன்படுத்துவதற்கும் ஆண்ட்ராய்டு செயலியில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசங்கள் மிக அதிகம்.

பயன்படுத்த ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் செயலிகள் கொட்டிக்கிடக்கின்றன. விண்டோஸ் கைபேசியில் இருந்த பிராசசர் வேகம் 50 MHz மட்டுமே அதிகம் என்றாலும் பயன்பாட்டு வேகத்தில் பட்டையக் கிளப்புகிறது.

தமிழ் பயன்பாடு என்பது பிஸ் போன்களில் இன்னும் வந்து சேரவில்லை. Opera Mini Browser மூலமாக தமிழ் சேவியில் உருப்பெற்று படிக்க மட்டும் முடிகிறது (தகவலுக்கு நன்றி முகுந்த்). மற்றபடி எழுதுவது இதுவரை சாத்தியப்படவில்லை. பிரபல கும்பனியில் நுட்பக் குழுவிடம் கேட்டபோது அது பற்றி நினைத்துக் கூட பார்க்காதே என்கிற மாதிரி பதில் அனுப்பினார்கள். ஆனால் சந்தோஷப்படவேண்டிய விசியம், லினக்ஸில் தமிழ் உட்பட இதற இந்திய மொழிகளைக் கையாளும் பாங்கோ லைப்ரரி தற்போது ஆண்ட்ராய்டில் சேர்க்கப்படாவிட்டாலும், சோதனைக் கூடத்தில் உள்ளது. அடுத்தடுத்த பதிப்புகளில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான விசியம்!

எனவே கைபேசியிலும் பரவலாக தமிழ் எழுதும் காலம் வெகு தொலைவில்  இல்லை.

தமிழ் வாழட்டும், யூனிக்ஸ் வழி நுட்பம் வளரட்டும்.

நன்றி.

Older Posts »

Categories

Follow

Get every new post delivered to your Inbox.